இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அந்த நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்றது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹுவின் ஆட்சிக் காலம் முடிவடிந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இதில் பெஞ்சமின் நேட்டன்யாஹுவின், லிகுட் கட்சி 37 தொகுதியை கைப்பற்றிய நிலையில், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமர் அரியணை ஏறினார். ஆனால், “இஸ்ரேல் பெய்டெய்னு” என்ற கட்சி பெஞ்சமின் நேட்டன்யாஹுவிற்கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெற்றது.
இதையடுத்து பெஞ்சமின் நேட்டன்யாஹுவிற்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க, கூடுதலாக ஒரு எம்.பி தேவைப்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்யாத பெஞ்சமின் நேட்டன்யாஹு, நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.
அதன்படி, இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் நாடுமுழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் அந்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் ஆட்சியமைக்கும் முனைப்போடு உள்ள பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் ‘லிகுட்’ கட்சிக்கும், முன்னாள் ராணுவ தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘புளு அன்ட் வொயிட்’ கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 
															

