பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் அவற்றைத் தீர்த்து குறுகிய காலத்திற்காவது தாய் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்ற வேண்டியது கல்விமான்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கான முன்மொழிவொன்றினை புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பொறியியலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் நாட்டை விட்டுச்செல்லுதல் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய சவாலாகும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திரமான ஜனநாயக நாடு என்ற வகையில் எந்தவொரு நபருக்கும் எவ்வித எல்லைகளும் விதிக்கப்படவில்லையாயினும் நாட்டுக்கான தமது பொறுப்பினை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் அவற்றைத் தீர்த்து குறுகிய காலத்திற்காவது தமது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்ற வேண்டியது கல்விமான்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.+

