பயங்கரவாத குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்டுள்ள சமீபத்திய அச்சுறுத்தல்களை சமாளிக்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சட்டமூலத்தில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நீதி அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க ஆகியோரின் பரிந்துரைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலத்தில் பயங்கரவாதத்திற்கு ஒரு பரந்த வரையறையை வழங்கியுள்ளதுடன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் காணப்படாத பகுதிகளை உள்ளடக்கியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ். பயங்கரவாதத்தை கையாள்வதற்கு பிரித்தானியா மற்றும் இந்தியாவில் உள்ள சட்டங்களை மாதிரியாகக் கொண்ட குறித்த புதிய சட்டமூலம், பயங்கரவாத நடவடிக்கைகளின் செயல்பாட்டிற்கும் ஒருங்கிணைப்பிற்கும் சைபர்ஸ்பேஸைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
“நாங்கள் இப்போது பயங்கரவாதத்தின் ஒரு புதிய வடிவத்தை எதிர்கொள்கிறோம். பயங்கரவாதிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது பொதுவானது.
இத்தகைய இணைய நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு போதுமான அதிகாரங்கள் இல்லை” என அமைச்சரவை வட்டாரம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இந்த புதிய சட்டமூலத்தில் நாட்டிற்கு வெளியேயும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ஏற்பாடுகளும் உள்ளன என்று அமைச்சரவை வட்டாரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

