அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக மேலும் நான்கு மாவட்டங்களில் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய மாத்தளை, புத்தளம், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு பேரணிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும் பேரணிகள் நடைபெறவுள்ள தினங்கள் குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இரு கட்சிகள் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளன.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது.
இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் கடும் போட்டி நிகழ்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறிருப்பினும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக தொடர்ச்சியாக ஆதரவு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர், அமைச்சர் சஜித்திற்கு ஆதரவாக மாத்தறை மற்றும் குருநாகலிலும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியானது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை, எந்தவொரு பேரணிகளையும் நடத்தக்கூடாது என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

