கொழும்பிலிருந்து அருவக்காட்டுக்கு குப்பைகளை ஏற்றிச்சென்ற இரண்டு லொறிகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியிலேயே இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு குப்பைகளை ஏற்றி சென்ற டிபர் ரக லொறியொன்று, குப்பைகளை ஏற்றி சென்ற இன்னொரு டிபர் ரக லொறியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான டிபர் ரக லொறியின் முன்பக்கம் பலத்த சேதமைடைந்துள்ளதுடன், இந்த விபத்தின்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து விபத்துக்குள்ளான டிபர் ரக லொறியை விபத்து அவசர பிரிவு வாகனம் பாதையில் இருந்து அப்புறப்படுத்தியதுடன், முந்தல் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பாக முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இதேபோன்று கடந்த மாதம் 14ஆம் திகதியும் இவ்வாறு குப்பை ஏற்றிச் சென்ற லொறிகள் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில் டிபர் ரக லொறியின் சாரதி ஒருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

