அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது மாற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
திப்படுவாவ சந்தியில் குறித்த பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் இலக்கத் தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் மூவர் பயணம் செய்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் விடுத்த கட்டளையை மீறி சென்றதை அடுத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்துள்ளனர்.
அவ்வேளை மோட்டார் சைக்கிளின் நடுவில் இருந்த நபர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.