நான்கு கைவிரல்கள் உடைந்து போன நிலையில், பாதிக்கப்பட்ட நபருக்கு வெற்றிகரமான முறையில் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு அனைத்து விரல்களையும் பொருத்தி, கண்டி போதனா வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் அமில சஷங்க உட்பட மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
பயிர்களை அரைக்கும் மின் இயந்திரத்தில் கைவிரல்கள் சிக்கிய நிலையில், காயமடைந்த நபர், இயந்திரத்துடன் நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்குரணை தெரம்புகஹாவத்தை பிரதேசத்தை சேர்ந்த காயமடைந்த நபருக்கு விசேட மருத்துவக்குழுவில் 5 மணி நேரம் சத்திர சிகிச்சை மேற்கொண்டு விரல்களை பொருத்தியுள்ளனர்.
மொஹமட் பைசால் என்ற இந்த நபர் வைத்தியசாலையின் 22வது விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அவர் தற்போது ஆரோக்கியமாக இருக்கின்றார். வடை விற்பனை செய்யும் பைசால், வடை சுடுவதற்கு தேவையான பருப்பை அரைப்பதற்கு இந்த இயந்திரத்தை பயன்படுத்தி வருகிறார்.
இயந்திரத்தை சுத்தப்படுத்தும் போதும் இயந்திரம் திடீரென இயங்கியுள்ளதுடன் கைவிரல்கள் இயந்திரத்தில் சிக்கியுள்ளதாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரத்நாயக்க கூறியுள்ளார்.
விரல்களில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தன. இரண்டு விரல் உடைந்து காணப்பட்டன. இரத்த நாளங்களுக்கு அதிகமான சேதம் ஏற்படவில்லை என்பதால், சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கயாமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது, கைவிரல்கள் சிக்கிய இயந்திரத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த இயந்திரத்தின் இரும்புகளை வெட்டி அகற்ற முடியாத நிலைமை ஏற்பட்டதால், கண்டி மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினரிடம் இருந்து விசேட இயந்திரம் ஒன்றை வரவழைத்து இரும்பு பகுதிகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.