இந்தியா மீதான பதில் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானத்தை பயன்படுத்தவில்லை, சீனாவிடம் வாங்கிய ஜேஎப்-17 ரக விமானத்தை பயன்படுத்தினோம் என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கட்டிடங்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 26ம் தேதி குண்டு வீசின. இதற்கு பதில் நடவடிக்கையாக மறுநாள் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியா வான் பகுதியில் ஊடுருவி குண்டுகள் வீசியது.
தீவிரவாத ஒழிப்பு பணிக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்தியது. இந்திய ரேடாரிலும் எப்-16 ரக போர் விமானத்தின் எலக்ட்ரானிக் சிக்னல்கள் பதிவாகியது.
அந்த விமானத்தில் பயன்படுத்தப்படும் ஏஐஎம்-120 ரக ஏவுகணையின் பாகங்களையும் ஆதாரமாக இந்தியா காட்டியது.
இதையடுத்து இது தொடர்பாக பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில் ரஷ்ய செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில் கூறியதாவது:இந்திய இலக்குகளையும், இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தவும் சீனாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஜேஎப்-17 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
தாக்குதல் நடந்த நேரத்தில் பாகிஸ்தான் விமானப்படையின் அனைத்து விமானங்களும் வானில் பறந்து கொண்டிருந்தன.
ஒப்பந்தப்படி எப்-16 போர் விமானம் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது பாகிஸ்தான்-அமெரிக்கா இடையேயான பிரச்னை.
இந்தியா மீதான தாக்குதலில் ஜேஎப்-17 ரக விமானத்தை பயன்படுத்தியது பற்றி அமெரிக்காவிடம் பாகிஸ்தான் விளக்கியது.
தற்பாதுகாப்புக்கு தேவைப்படும் எதையும் பாகிஸ்தான் பயன்படுத்தும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தினோம். திருப்பி தாக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது என்பதை இந்தியாவிடம் தெரிவிக்க பாகிஸ்தான் விரும்பியது.
பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதமும், போரை தடுக்கும் உபகரணமாக உள்ளது. பாகிஸ்தானின் அணு ஆயுதமும் போருக்கான வாய்ப்பை குறைக்கிறது.
அணு ஆயுத பரவல் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டால், பாகிஸ்தானும் அதை மேற்கொள்ளும். இரு நாடுகள் இடையே அமைதி ஏற்படுத்த ரஷ்யா உட்பட சில நாடுகள் முன்வந்தால், அதை பாகிஸ்தான் வரவேற்கும்.
போர் விமானங்கள், வான் பாதுகாப்பு கருவிகள், டாங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை வாங்குவது தொடர்பாக ரஷ்யாவிடம் பாகிஸ்தான் பேசி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

