சமீபத்தில் போலீஸ் புகார் வரைக்கும் சென்று பரபரப்பு ஏற்படுத்திய படத்தின் தலைப்பு கடலை போட பொண்ணு வேணும். இதில் முதல் வார்த்தையை எடுத்து விட்டு போஸ்டர் அடித்து ஒட்ட… விவகாரம் போலீஸ் வரைக்கும்போனது. போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதியே மன்னிப்பு கேட்டார். இந்தப் படத்தில் அசார், மனிஷா, யோகிபாபு, செந்தில், மன்சூரலிகான் பிக்பாஸ் காஜல் உள்பட பலர் நடித்துள்ளனர். தற்போது கடலை போடுவது என்றால் என்ன என்பது பற்றி படத்தின் இயக்குனர் ஆனந்தராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
படத்தின் நாயகன், சென்னைக்கு கடலைப் போட்டு காதல் செய்வதற்காக நாயகியை தேடி வருகிறார். காதலின் அடிப்படையே கடலைப் போட்டு கல்யாணம் செய்வதுதான் என்பதே கதையின் மையம். காதல் என்பதே புரிதல் தான், இதைத் தான் கடலை என்று விவரிக்கிறோம். என்னுடைய கதாநாயகன் காதலியை கண்டறிந்தாரா? கடலை போட்டாரா? கல்யாணம் செய்தாரா என்பது மீதி கதை.
ஜனரஞ்சகமும் சுவாரஸ்யமும் கலந்த படம். குடும்பத்துடன் சென்று பார்க்ககூடிய படம் என்றால் அது மிகையாகாது. கதையின் இரண்டாவது பாகம் முழுவதும் ‘காதலர் தினம் அன்று நடந்த சம்பவங்களை மையமாக கொண்டது. மக்கள் முகம் சுளிக்கும் விதமான எந்த காட்சிகளும் இதில் இடம்பெறவில்லை. காதலித்து கல்யாணம் செய்வதை இலக்காக கொண்ட கதாநாயகனாக அசார் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். யோகிபாபு வரும் காட்சிகள் திரையரங்கை சிரிப்பால் நிறையவைப்பது உறுதி. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார். என்கிறார் ஆனந்தராஜன்.