பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளை அகற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அனுமதிக்காது.
அரசதரப்பு உறுப்பினர்கள் பலரும், இந்தச் சட்டமூலத்தை விரும்பவில்லை. எனவே, அவர்களின் ஆதரவையும் பெற்று இந்தச் சட்டமூலத்தை தோற்கடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜேவிபியும், இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கும், என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தானது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
அத்தோடு இதனை எதிர்த்து தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

