சேரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் திருமணம். இந்தப்படத்தில் சேரன் தங்கையாகவும், உமாபதி ராமய்யாவின் காதலியாகவும் நடித்திருப்பவர் காவ்யா சுரேஷ். திருமணம், தமிழில் புதிது என்றாலும், மலையாளத்தில் ஏற்கெனவே சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்குள் வந்தது எப்படி என்பது குறித்து காவ்யா சுரேஷ் கூறியதாவது:
எனக்கு பூர்வீகம் கேரளாதான். ஆனால் நான் வளர்ந்தது சென்னையில். டான்ஸ் பயின்றேன். அதனால் நடிக்கவும் ஆசை வந்தது. சென்னை, எத்திராஜ் கல்லூரியில் விஷ்காம் படித்தேன். அப்போது ஒரே முகம் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானேன். அதில் 3 ஹீரோயின்களில் ஒருத்தியாக நடித்தேன். அடுத்து தென்காசி காத்து என்கிற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்தேன்.
டான்ஸ் மாஸ்டர் ரெஜினா எனக்கு நண்பர். அவர்தான் திருமணம் படத்துக்கும், டான்ஸ் மாஸ்டர். ஒரு நாள் அவரை பார்க்க போயிருந்தேன். அவர் சேரன் ஆபீசில் இருப்பதாக சொன்னார்கள். அங்கு போய் பார்த்தேன். அங்கு சேரன் இருந்தார். ஆர்வத்தில் அவருடன் ஒரு போட்டோ எடுத்து விட்டு வந்து விட்டேன். சில நாட்களுக்கு பிறகு ரெஜினா, போன் பண்ணினார். “சேரன் படத்தில் நடிக்க விருப்பமா விருப்பம் இருந்தால் அவரை போய் பார்” என்றார்.
நானும் நம்பிக்கை இல்லாமல் தான் சென்றேன். சில போட்டோ ஷூட் எடுத்து விட்டு அனுப்பி விட்டார்கள். ஒரு வாரத்துக்கு பிறகு “சேரன் தங்கையா நடிக்கிறீங்க. சார் ஓகே பண்ணிட்டார்”னு தகவல் வந்தது. இப்படித்தான் திருமணத்துக்குள் வந்தேன். என்னுடைய நடிப்பை எல்லோரும் பாரட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க ஆசை. அதனால் கதைகளை தேர்வு செய்து நடிப்பேன். என்கிறார் காவ்யா சுரேஷ்.

