இந்தோனேசியாவின் அனாக் கிரகட்டாவ் தீவில் உள்ள எரிமலை மீண்டும் வெடிக்கத் துவங்கியுள்ளதால் அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் பாதுகாப்பான் இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீர் சுனாமிஇந்தோனேஷியாவின் ஜாவா – சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள சுந்தா ஜலசந்தி பகுதியில், உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9.27 மணியளவில் பயங்கர சுனாமி ஏற்பட்டது.
இப்பகுதியில் அமைந்துள்ள ‘அனாக் கிரகட்டாவ்’ எரிமலை வெடித்துச் சிதறியதால், ஆழ்கடலில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுனாமி தாக்கியதாக கூறப்படுகிறது. சுனாமி அலைகள் 10 மீ முதல் 20 மீ உயரத்திற்கு எழுந்ததாக, நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர். இதில், ஜாவா தீவில் அமைந்துள்ள பான்டன் மாகாணத்தின் பான்டெக்லாங்க் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கு கடற்கரையை ஒட்டிய வீடுகள் முழுவதும் சேதமடைந்தன.
கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பலர் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கத்தவறிய பேரிடர் மையம்சுனாமி ஏற்படுவதற்கு முன்பாக இரவு 9 மணி அளவிலேயே கடலில் சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்துள்ளன. அப்போது, சுனாமி எச்சரிக்கை விடுக்கின்ற காலநிலை ஆய்வு மையம் தனது டிவிட்டர் பதிவில், ‘இது சுனாமி அல்ல, மக்கள் பதற்றமடைய அவசியமில்லை’ என கூறியது.
அதன்பிறகு அரை மணி நேரத்தில் சுனாமி தாக்கி உள்ளது. உடனே தனது டிவிட்டர் பதிவை அழித்த காலநிலை ஆய்வு மையம், தவறுக்காக மன்னிப்பு கோரி உள்ளது. எனினும் எரிமலை வெடித்ததால்தான் சுனாமி ஏற்பட்டதா என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
281 பேர் பலி சுனாமி பேரலைகள் தாக்கியதில் இதுவரை 281 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 1,016 பேர் காயமடைந்துள்ளதாகவும், 57 பேரை காணவில்லை எனவும் பேரிடர் முகமை தகவல் தெரிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளதால், மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

