அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சவூத் வனராஜா பகுதியில் வாடி வீடு ஒன்றின் வளாகப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர் ஒருவரை அட்டன் பொலிஸார் இன்று மாலை 3 மணியளவில் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அட்டன் பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.பிரதீப் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவ்வாறு கஞ்சா செடிகள் வளர்ப்பதை கண்டுள்ளனர்.
இதன்போது 3 கஞ்சா செடிகள் இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஒரு கஞ்சா செடியின் உயரம் ஒரு அடியும், மற்றைய இரண்டும் சிறிய செடிகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தனது வாடி வீட்டு முற்றத்தில் இச்செடிகளை வளர்த்து வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கஞ்சா செடிகளையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் நாளை அட்டன் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













