வடமராட்சி கிழக்கில் கடலட்டைத் தொழிலில் ஈடுபட்டவர்கள் வெளியேறவேண்டும் என்று நீதிமன்று உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்கள் முல்லைத்தீவு, சாலைப் பிரதேசத்தில் வாடி அமைத்துக் கடலட்டைத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள்,வடமராட்சி கிழக்கில் பிரதேச செயலரின் அனுமதி இன்றி அரச காணியில் வாடி அமைத்துக் கடலட்டை பிடித்தவர்களுக்கு எதிராக மருதங்கேணிப் பிரதேச செயலரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையை அடுத்து அங்கு நிறுவப்பட்டிருந்த கடலட்டைத் தொழில் செய்யும் 8 நிறுவனங்களும் வெளியேறவேண்டும் என்று கடந்த 25ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டது. அதையடுத்து வாடிகள் அகற்றப்பட்டன.
மருதங்கேணி, தாளையடி போன்ற இடங்களில் 8 நிறுவனங்களுக்குச் சொந்தமான 32 வாடிகள் அகற்றப்பட்டன. சுமார் 850 இற்கு மேற்பட்ட பிற மாவட்ட மீனவர்களும் வெளியேறினர்.
அந்த நிறுவனங்களுக்கு முல்லைத்தீவு, சாலைப் பிரதேசத்திலும் கடலட்டைத் தொழில் செய்வதற்கான அனுமதி உண்டும் என்றும், அதன் அடிப்படையில் அவர்கள் அங்கு வாடிகள் அமைக்கின்றனர் என்றும் பிரதேச மீனவர்கள் கூறுகின்றனர்.
சாலையில் உள்ள கடற்படைத் தளத்தை அண்டிய பகுதிகளுக்குள் செல்ல உள்ளூர் மக்களுக்கோ, மீனவர்களுக்கோ அனுமதியில்லை. பிறமாவட்ட மீனவர்கள் மட்டுமே அந்தப் பகுதியில் தொழில் செய்கின்றனர். தற்போது அதிக மீனவர்கள் அந்தப் பகுதியில் குவிகின்றனர்.
அவர்களின் படகுகளால் உள்ளூர் மீனவர்களின் வலைகள் பாதிப்படையும். அவ்வாறான பாதிப்புக்கள் நடந்தால் கடற்படை முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர்.