இலங்கையர்களுக்கு அடுத்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக அமையவுள்ளதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட மருத்துவர்கள் மற்றும் தாதியர் களுக்கான விடுதிகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அடுத்த ஆண்டு இலங்கையின் வரலாற்றில் மிகவும் மேசமான ஆண்டாக அமைவுள்ளது. காரணம் 2019ஆம் ஆண்டிலேயே நாம் அதிகளவான கடன்களைச் செலுத்த வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
நாம் அனைத்துக் கடன்களையும் மையப்படுத்தியே ஒவ்வொரு வரவு –செலவுத் திட்டத்தையும் தயாரித்து வந்தோம். எமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதன் பின்னர் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தின் போது பல்வேறு உதவித்திட்டங்களையும், சம்பள அதிகரிப்புக்களையும் வழங்கியுள்ளோம்.
கடன்களை மீளச்செலுத்துமாறு பல்வேறு தரப்புக்களிடத்திலிருந்தும் எமக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஆராய்ந்து பார்த்தபோது கடந்த அரசு பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்குத் தெரியாது மிகவும் சூட்சுமமாக வங்கிகள் ஊடாகப் பெருந்தொகையான கடன்களைப் பெற்றுள்ளது.
கடன்பெற்றுள்ளமையானது நேரடியாக திறைசேரிக்கு வருவதில்லை. வங்களின் பிரகாரம் பெற்ற கடன்களாகவே கணிக்கப்படுகின்றது. அரச வங்கிகளின் மூலமாகப் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்தாது விட்டால் சகல வங்கிகளும் இழுத்து மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம்.
லலித் கொத்தலாவலவின் வங்கிக்கு நடந்ததைப்போன்று தான் ஏனைய வங்கிகளுக்கும் நடக்க வேண்டிய ஆபத்துள்ளது. நேர்வழியிலோ அல்லது திருட்டுவழியிலோ கடன்களை யார் பெற்றிருந்தாலும் எமது மக்களுக்காக நாம் மீளச் செலுத்த வேண்டி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம் -– என்றார்.