வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனகராயன்குளம் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்தப்பட்டுள்ளன.
வவுனியா கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக இன்று காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கனகராயன்குள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தாக்குதலுக்கு இலக்கான, முன்னாள் போராளியின் குடும்பத்தினருக்கு நீதிகோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா கனகராயன்குளத்தில் முன்னாள் போராளியின் குடும்பத்தினர், மீது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்குதல் நடத்தியதில், மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களான முன்னாள் போராளியின் இரு பிள்ளைகளையும் சிறுவர்கள் என்றும் பாராது தாக்கியதில் 14 வயது சிறுமிக்கு இரத்தப்போக்கும் ஏற்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதிகோரி நடத்தப்பட்ட ஆரப்பாட்டத்தின் போது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மாற்றுமாறு வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், ‘பள்ளி மாணவரின் இரத்தம் குடிக்கும் இரத்தக் காட்டேரியே ஊரை விட்டு வெளியேறு, சட்டத்தை மீறாதே, சண்டித்தனம் செய்யாதே, முன்னாள் போராளிகள் என்ன உன் அடிமைகளா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கனகராயன்குளம் பாடசாலை மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் மற்றும் கனகராயன்குளம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, பேராட்டம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.