கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகள், மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், விவசாயத் திணைக்கள சார் அதிகாரிகள், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகேந்திர குணரட்ணவும் கலந்து கொண்டிருந்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் குறிப்பிடுகையில், “வறுமையில் முல்லைத்தீவு மாவட்டம் முதல் நிலையிலும், அதற்கடுத்த நிலையில் கிளிநொச்சியும் உள்ளது. இதேவேளை விவசாயத்திலும் மிகவும் பின்தங்கி உள்ளது.
யுத்தம் காரணமாக குறித்த பின்னடைவு விவசாய ரீதியில் ஏற்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணம் மிகவும் பின்தங்கி உள்ளது.
அதுவும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணம் விவசாய மாகாணமாக காணப்படுகின்ற போதிலும் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில் வடக்கில் நவீன முறையிலான விவசாயத்தை மேற்கொள்வதற்கு உலக வங்கியின் நிதி கிடைத்துள்ளது. குறித்த நிதியை வைத்து பல்வேறு திட்டங்கள் விவசாயிகளிற்கு கிடைக்கவுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.