‘பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பியோ தெரிவிக்கவில்லை’ என, பாக்., வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
பாக்.,கின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கானை, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, முதல்முறையாக தொலைபேசியில் அழைத்து, வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இம்ரான் கான் தலைமையில், பாக்.,கில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுடன், சுமுகமான உறவு ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. மேலும், பாக்.,கில் இயங்கி வரும் பயங்கரவாத குழுக்கள் மீது, இம்ரான் கான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு, பாக்., வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், முகமது பைலல், தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பியோவுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், பாக்.,கில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பேச்சு எழவில்லை. உடனடியாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம், தன் அறிக்கையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

