அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தொடர்பில் இருந்த மாடல் அழகிகளுக்கு தேர்தல் பிரசாரத்தின்போது பணத்தை கொடுத்த விவகாரத்தால், அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படலாம் எனவும், பதவி நீக்க தீர்மானத்தை அவர் சந்திக்க நேரிடலாம் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்றது. இதில், குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். அதற்கு முன்பாக அவர் ஆபாச பட நடிகை ஸ்டாமி டேனியல்ஸ், பிளேபாய் மாடல் கரண் மெக்டால் ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்தார். தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, இந்த இரு அழகிகளுக்கும் டிரம்ப்பின் உத்தரவுப்படி அவருடைய, அப்போதைய வழக்கறிஞராக இருந்த மைக்கேல் கோஹன் ரூ.1.9 கோடி பணத்தை அழகிகளுக்கு கொடுத்து அவர்களின் வாயை மூடினார்.இந்த வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்கீன செயலுக்காக அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது. அவருடைய தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் அவருடைய பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது. இது பற்றி வாஷிங்டனை சேர்ந்த நோசாமேன் சட்ட நிறுவனத்தின் பிரசார நிதி நிபுணர் கேத் பிலின்ஸ்கி கூறுகையில், ‘‘தேர்தல் பிரசார நிதியை முறைகேடாக டிரம்ப் பயன்படுத்தியது தொடர்பாக அவர் மீது அமெரிக்க தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்படலாம்’’ என கூறியுள்ளார். இதற்கு மழுப்பலாக பதில் அளித்த டிரம்ப், ‘‘இது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. தேர்தல் பிரசார விதிமுறை மீறல்கள் ஒன்றும் பெரிய விஷயமாக கருதப்படுவதில்லை. கொடுத்த பணம் எல்லாம் என் சொந்த பணம்’’ என்றார்.

