சீனாவில் பன்றிக்காய்ச்சல் (Swine Fever) பரவுவதைக் கட்டுப்படுத்த பன்றிகளைக் கொன்று குவித்து வருகின்றார்கள்.
நோய்த்தாக்கத்திற்கு உள்ளான மற்றும் நோய் அறிகுறிகள் தென்படும் சுமார் 14,500 பன்றிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளன.
பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு பரவும் African Swine Fever-ஐ குணப்படுத்தும் மருந்துகளோ முன்கூட்டியே தடுக்கும் மருந்துகளோ இல்லை.
தற்போது ரஷ்யாவில் பன்றிகளுக்கு பரவி வரும் இந்த நோய் சீனாவிற்கும் பரவி வருகிறது.
சீனாவில் கடந்த மே மாதம் நோய் பரவியிருப்பது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது லையூங்கன் நகரில் ஏராளமான பன்றிகளுக்கு இந்த நோய் பரவியுள்ளது.
உலகில் பன்றி இறைச்சி உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. லையூங்கன் நகரில் ஏராளமான பன்றிப் பண்ணைகள் உள்ளன. 40 இலட்சம் பன்றிகள் அங்கு மட்டுமே வளர்க்கப்படுகின்றன.
அங்கு பன்றிகளுக்கு இந்த நோய் தாக்கி இருப்பதால், அதை கட்டுப்படுத்துவதற்காக நோய் அறிகுறி உள்ள பன்றிகளைக் கொன்று குவித்து வருகிறார்கள். இதன்படி 14,500 பன்றிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளன.
இந்த நோயினால் சீனாவில் பன்றிப் பண்ணைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பன்றிகளுக்கு ஏற்படும் இந்த காய்ச்சல் தொற்று மனிதனுக்கு பரவுவதில்லை. அதே நேரத்தில், இவற்றைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஏராளமான பன்றிகள் அழிவதுடன், காட்டு விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே தான் அதைக் கட்டுப்படுத்த சீனா தீவிரம் காட்டி வருகிறது.

