பலவித சர்ச்சைகளுக்கிடையே இன்று அதிமுக வின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக மூன்றாக உடைந்து அதன் பிறகு அதில் இரு அணிகள் ஒன்றாக இணைந்தன. எடப்பாடி அணியும் ஓ பி எஸ் அணியும் ஒன்றாக இணைந்தும் உள்ளூர இரு அணிகளுக்கும் இடையில் அதிகார மோதல் இருப்பதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளிவந்த ஒரு பத்திரிகை செய்தியின் படி அதிமுக உறுப்பினர்கள் 1.5 கோடியில் இருந்து 60 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஒன்றாக இணைந்தும் தனித்தனியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் செயல்படுவதால் மூன்றாம் அணித் தலைவரான டிடிவி தினகரனுக்கு ஆதரவு அதிகரிக்கும் என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கபட்டார். ஆனால் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இணைந்த பிறகு பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் நியமிக்கப்பட்டனர். அதை ஒட்டி கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடக்க உள்ள அதிமுக செயற்குழு கூட்டம் அரசியல் நோக்கர்கள் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது.