வடக்கு மாகாண அமைச்சரவையின் அனுமதியுடன் கடந்த காலங்களில் முன்னெடுக்கப் பட்ட திட்டங்கள், வடக்கு மாகாண முதலமைச்சரின் அனுமதியுடன் தற்போது முன்நகர்த்தப்படுகின்றன.
வடக்கு அமைச்சரவை முடக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுக்குள் செய்து முடிக்கப்பட வேண்டிய திட்டங்களே இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன.
வடக்கு அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை வழங்கியிருந்தது. பா.டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர்கின்றார் என்று கூறியிருந்தது.
இந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசமைப்புக்கு முரணாக வடக்கு மாகாண அமைச்சரவையில் ஆறு அமைச்சர் பதவி வகிக்கின்றனர்.
இந்த நிலையில் வடக்கு அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் தடை விதித்துள்ளார்.
வடக்கு அமைச்சரவைக் கூட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இடம்பெறவில்லை.
மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள், மாகாண பேரவைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டும்.
அங்கிருந்து வடக்கு மாகாண தலைமைச் செயலர் பணிமனையால் மாகாண அமைச்சரவையின் அனுமதிக்காகச் சமர்பிக்கப்படும்.
மாகாண அமைச்சரவை கூட்டம் நடைபெறாமையால், 8 மாகாணசபை உறுப்பினர்களின் 130 திட்டங்களுக்கான அனுமதி வடக்கு மாகாண முதலமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அனுமதிக்கு அமைவாக திட்டங்கள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுகின்றது.