எல்லை நிர்ணய அறிக்கை சம்பந்தமாகவும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரத்துக்குள் அறிவிப்பொன்றை விடுப்பார் என்று சபாநாயகர் கருஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தினப்பணிகள் முடிவடைந்த பின் னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய பொது எதி ரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, மூன்று மாகாண சபைகளின் ஆயுள்காலம் முடிவடைந்து எட்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.
இதற்கிடையில் மேலும் மூன்று சபைகளின் ஆயுள்காலமும் இன்னும் நான்கு மாதங்களுக்குள் நிறைவுக்கு வரவுள்ளது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இழுத்தடிக்காது தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சபைக்கு உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.அமைச்சர் பைசர் முஸ்தபாவால் மார்ச் 8ஆம் திகதி எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அது குறித்து விவாதிப்பதற்கு அக்கறை காட்டப்படவில்லை. தேர்தலை இழுத்தடிப்பதற்கு அரசு முற்படுகின்றது என்பதே இதன்மூலம் புலனாகின்றது. இது குறித்து சபாநாயகர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. மாகாண சபைத் தேர்தலும் அரசமைப்பு தொடர்புபடுகின்றது. சபாநாயகரும் அரசமைப்பை மீறும் வகையில் செயற்படக்கூடாது. வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படவேண்டும் – என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவும் இதே கருத்தை வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர், இந்தப் பிரச்சினை குறித்து நானும் அதிக கவனம் செலுத்தியுள்ளேன். தலைமை அமைச்சருடன் நேற்று முன்தினமும் பேச்சு நடத்தினேன். சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச வேண்டியுள்ளது என்று தலைமை அமைச்சர் கூறியுள்ளார்.
எப்படியிருந்த போதிலும் இந்தப் பிரச்சினை குறித்து இந்த வாரத்துக்குள் அறிவிப்பொன்றை விடுப்பார். அதன்பின்னர் எம்மால் விவாதிக்கக் கூடியதாக இருக்கும். சபை முதல்வருக்கும் இது பற்றி அறிவிக்கின்றேன் – என்றார்.