ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம், கொதித்து வெடித்துள்ளது. தூத்துக்குடி மட்டுமன்றி, தமிழகம் முழுக்க கொந்தளிப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்றைய துப்பாக்கிச் சூடு கொடூரத்துக்குக் கடுமையான கண்டனத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி.
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் பல ஆண்டுகளாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை ஆட்சியாளர்களிடம் பலமுறை சொல்லியிருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதனால், தங்கள் வேலைகளை விட்டுவிட்டு 99 நாள்களாக அகிம்சை வழியில் போராடி வந்தனர். லட்சக்கணக்கான மக்கள் திரண்டு பொதுக்கூட்டம் நடத்தினார்கள். அப்போதெல்லாம் எந்தக் கலவரமும் ஏற்படவில்லையே. அப்போது காவல்துறையினரைக் குவிக்கவில்லையே. உண்மையிலேயே மக்கள் மீது அக்கறைகொண்ட அரசாக ஆளும் அதிமுக அரசு இருந்திருந்தால், அப்போதே மக்களிடம் நேரிடையாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் அல்லவா? செய்யவில்லையே.
எத்தனை நாள்தான் உட்கார்ந்த இடத்திலேயே போராடுவது? அதனால்தான் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணி நடத்தினர். அந்தப் பேரணியில், ஆயிரக்கணக்கில் காவல்துறையினரைக் குவிக்கவேண்டியதன் அவசியம் என்ன? அப்போது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு என்ன முயற்சி மேற்கொண்டது? பேரணி திடீரென கலவரமாக மாறியதன் பின்னணியில் பெரிய சதி இருக்கிறது. பெரிய கலவரத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் மக்கள் மீது தடியடியும் கண்ணீர்ப் புகைக்குண்டும், இறுதியாக துப்பாக்கிச் சூடும் நடத்தியது திட்டமிட்ட செயலே. இனி, போராட்டம் நடத்தவே மக்களுக்கு பயம் ஏற்பட வேண்டும். அரசை எதிர்த்து எதுவும் செய்யக் கூடாது என்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் திட்டம்.
பெரிய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு, நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றால், இறுதியாகவே துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். அப்போதும் முதலில் முழங்காலுக்குக் கீழேதான் சுட வேண்டும். நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் பலியான யாருமே காலில் சுடப்படவேயில்லை. மிகத் துல்லியமாகத் துப்பாக்கிச்சுடும் போட்டியில் குறிபார்த்துச் சுடுவதுபோலவே சுடப்பட்டிருக்கிறார்கள். அதிலும், மாணவி வெனிஸ்டா யார் மீது கல் வீசினார்? அமைதியாகப் போராடியவரை, வாயில் சுட்டதெல்லாம் மனசாட்சியின்மையின் உச்சம். அந்தக் காட்சியைச் செய்தியில் பார்த்ததும் துடித்துப்போனேன். ஆட்சியாளர்களின் மனம் உறுத்தவில்லையா? உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம் என்ற செய்திகள் வரவர பதற்றம் அதிகமாகிறது. இந்நிலையில், இன்றும் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதெல்லாம்… ஆட்சியாளர்களின் மேலுள்ள கோபத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.
கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்ப்போம், போராடுவோம் என அடிக்கடி தெருவுக்கு வந்தால் இதுதான் கதி எனவும் மறைமுகமாக மிரட்டுவதாக அரசின் செயல்பாடு இருக்கிறது. மக்களின் வாக்குகள் மட்டுமே அரசுக்கு முக்கியம். பின்னர், மக்கள் எப்படிப் போனாலும் கவலையில்லை. அதற்குக் கண்கூடான உதாரணம், நேற்றைய துப்பாக்கிச் சூடு. பலியானோருக்கு 10 லட்சம் நிவாரணம் அறிவித்ததும், தமிழக அரசின் செயல்பாடு முடிந்துவிடுமா? மக்களுக்குரிய நீதி கிடைக்க வேண்டாமா?” எனக் கொதிப்புடன் தொடர்கிறார் பாலபாரதி.
“ஆட்சியர் அனுமதியின்றி துப்பாக்கிச் சூடு நடந்திருக்காது. அவரோ நேற்று எங்கிருந்தார் என்பதே தெரியவில்லை. மக்களைச் சந்திக்கவும் இல்லை. மக்களின் அச்சத்தைப் போக்கி ஆறுதல் கூறவும் இல்லை. அதனால், உடனே அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அப்பாவி பொதுமக்களை குறி பார்த்துச் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸாரும் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சில வாரங்களுக்கு முன்பு, டெல்டா பகுதியில் துணை ராணுவப் படை குவிக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லையே. அப்போது, தமிழக முதல்வரோ, அமைச்சர்களோ அதற்கான காரணத்தைச் சொல்லவில்லையே. இன்னும் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு இருக்கிறது. தொடர்ந்து நீதி கேட்டு மக்கள் போராடிவருகின்றனர். இப்போதும் மக்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. நேற்றும் இன்றும் காவல்துறையினர் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்கிறது. அவர்கள் ஆட்சியாளர்களின் பேச்சைக் கேட்டு நடப்பவர்கள். அவர்களை இயக்குவது அரசுதானே” என்கிற பாலபாரதி, தமிழக அரசுக்குச் சில கேள்விகளை முன்வைக்கிறார்.
“தனியார் நிறுவனங்களினால் வரும் வருமானம் அரசுக்கு முக்கியம். அதைவிட, அவர்களிடமிருந்து கிடைக்கும் லஞ்சம் மிக முக்கியம். முதலாளிகளைப் பாதுகாக்கவே மத்திய, மாநில அரசுகள் துணைபோகின்றன. மக்களுக்குப் பயன்படும் வகையிலான திட்டங்கள், தொழிற்சாலைகளைக் கொண்டுவந்து, அதன்மூலம் அரசுக்கு வரும் வருமானத்தையும் மக்கள் நலத்திட்டங்களுக்குச் செலவழிப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை அளிப்பது என இருந்தால், மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். ஆனால், மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து, அவர்களின் உடல்நலனைப் பாதிக்கும் ஒரு தனியார் தொழிற்சாலை அமைய தமிழக அரசு துணைபோவது ஏன்?
ஊட்டி, கொடைக்கானலில் நடைபெற்ற மலர் கண்காட்சியைத் தொடக்கிவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். ஆனால், 99 நாள்களாகப் போராடிவந்த தூத்துக்குடி மக்களைச் சந்திக்கச் செல்லவில்லை. இத்தனை நாளாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டதா? உண்மையிலேயே ஸ்டெர்லைட் ஆலையால் யாருக்குப் பயன்? அதனால் என்ன நன்மை கிடைக்கிறது? மக்களின் நலனைவிட, தனியார் நிறுவனத்தைப் பாதுகாக்க தமிழக அரசு அதிக அக்கறை காட்டுவது ஏன்? நேற்று பெரிய கலவரமும் உயிரிழப்புகளும் நடந்திருக்கும் நிலையிலும் முதல்வர் தூத்துக்குடிக்குச் செல்லாமல் இருப்பது ஏன்? அமைச்சர் ஒருவர்கூட செல்லாமல் இருப்பது ஏன்? துப்பாக்கிச் சூடு மரணங்கள் மற்றும் மக்களின் பதற்றமான மனநிலையைப் போக்க தற்போது வரை தமிழக அரசு விளக்கமளிக்காமல் இருப்பது ஏன்? மத்திய அரசு இந்த நிகழ்வு தொடர்பாக எந்த அறிக்கையையும் கேட்காமல், எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இதற்கெல்லாம் வாக்களித்த மக்களுக்கு முதல்வர் பதில் தரவேண்டும். இனி, இதுபோன்ற மக்கள் விரோத நிகழ்வு நடக்காமல், மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டியது அரசின் கடமை. என்ன செய்யப்போகிறது மத்திய, மாநில அரசுகள்?” என்று கொந்தளிப்புடன் முடித்தார்.