யாழ்.அளவெட்டியைச் சேர்ந்த சிவதாஸ் சிவா என்பவர் பிரான்சில் உணவகங்களின் தலைமை உணவு தயாரிப்பாளர்களிடையே நடாத்தப்பட்ட பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைத் தனதாக்கிக்கொண்டுள்ளார். அதேவேளை, இவர் இல் டு பிரான்ஸ் மாநில ரீதியில் சிறந்த வெற்றியாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வெற்றியாளரின் நேர்காணல் ஒன்று
நான், 1990 ஆம் ஆண்டு எனது 19 ஆவது வயதில் பிரான்சுக்கு வருகை தந்திருந்தேன். 1993 ஆம் ஆண்டு முதல் பிரான்சு ‘ஈரோ டிஸ்னி’யில் இணைந்து பணியாற்றிவருகின்றேன். தற்போது ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட 38 பேர் எனது வழிநடத்தலில் பணியாற்றி வருகின்றார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மூன்று தடவைகளாக குறித்த பேகர் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டியில் தலைமை உணவு தயாரிப்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும். தனிப்பட்டவர்கள் கலந்துகொள்ளமுடியாத அதேவேளை, நிறுவனங்கள் ஊடாகவே கலந்துகொள்ள முடியும்,
2016 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட போட்டியில் தேசிய ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் தெரிவாகினேன். 2017 இல் நடாத்தப்பட்ட போட்டியில், இல் து பிரான்சு ரீதியில் 2 ஆம் இடத்துக்குத் தெரிவாகினேன். இம்முறை 2018 இல் 275 போட்டியாளர்கள் பங்குபற்றிய போட்டியில் தேசியரீதியில் 3 ஆம் இடத்துக்குத் தெரிவாகியுள்ளேன்.
கேள்வி: இந்தப்போட்டியில் பங்கு பற்றும் ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?
இங்கு நாங்கள் ஒருநாளைக்கு ஆயிரம் பேகர் தயாரிப்போம். ஒருவருடத்தில் சுமார் 25 வகையான புதிய வகை பேகரை நாங்கள் உருவாக்குவோம், ஒருமுறை எனக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரி என்னை அழைத்து, பேகர் தயாரிப்பது தொடர்பாக ஒருபோட்டி நடைபெறுகிறது. நாங்கள் பங்குபெற்றுவோமா என்ற கேட்டபோது, நான் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். அன்று முதல் நாங்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றிவருகின்றோம்.
கேள்வி: இம்முறை நீங்கள் போட்டிக்கு உருவாக்கிய பேகர் ஏனையவற்றை விட என்ன முக்கியத்துவம் உடையதாக உள்ளது?
இம்முறை முழுக்க முழுக்க எமது நாட்டுப் பொருட்களைக்கொண்டே குறித்த பேகரை நான் உருவாக்கியிருந்தேன். நான் பாவித்த பாண் கறிசேர்க்கப்பட்டது. மேற்பகுதி மஞ்சள் பொடி போடப்பட்டு மஞ்சள் நிறமாகக் காணப்படும். உள்ளே முக்கியமாக கத்தரிக்காய், வெங்காயம், மல்லியில் தயாரிக்கப்பட்ட சோஸ், மரவள்ளிக்கிழங்கு, வெண்டிக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தியிருந்தேன். இது சற்று வித்தியாசமாகவே இருந்தது. இதுதான் இந்த பேகரின் தனித்துவமாகவும் உள்ளது. இது பலரையும் கவர்ந்திருந்தது. படத்தைப் பார்த்தால் விளங்கும்.
கேள்வி: குறித்த போட்டியில் தொடர்ந்து பங்குபற்றும் எண்ணம் உள்ளதா ?பதில்: நிசசயமாக உள்ளது. மேலே உயரும் வரை நான் போட்டியிடுவேன். முதலிடத்தைப் பிடித்துவிட்டால் போட்டி விதிமுறையின்படி தொடர்ந்து பங்குபற்றமுடியாது. முதலிடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற இலக்கு கூடுதலாக உள்ளது. இம்முறை இறுதிப்போட்டிக்கு 25 தலைமை உணவு தயாரிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதில் நான் மட்டும் தான் வெளிநாட்டவர். அதுமட்டுமல்லாமல் தமிழர். ஏனையவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். எங்களுக்கும் ஒரு தகுதி இருக்கிறது. எங்களாலும் முடியும் என்ற நிலையையே இது உணர்தத்தி நிற்கின்றது. எனவே அடுத்த ஆண்டும் நான் இப்போட்டியில் பங்கு பற்றுவேன்கேள்வி: உங்கள் நிறுவனத்தின் உணர்வுகள் எவ்வாறு உள்ளன ?
எமது நிறுவனத்துக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எமது நிறுவனத்தில் 15 ஆயிரம் பேர்வரை வேலை பார்க்கின்றோம். எமது நிறுவன முகைமையாளரே இணையவலையில் என்னை வாழ்த்தி செய்தி அனுப்பியுள்ளார். இது எமது நிறுவனத்துக்கு பெருமை எனவும் குறிப்பிட்டுள்ளார். முக்கிய செய்தி நிறுவனங்கள் எல்லாம் இதனை வெளியிட்டுள்ளன. எமது நிறுவனத்தைப் பொறுத்தவரையில் இதனைப் பெருமையாகவே கருதுகின்றனர். அது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கேள்வி: இவ்விடயம் தொடர்பாக புலம்பெயர்வாழ் தமிழர்களுக்கு கூறவிரும்புவது என்ன ?எமது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாகத் திகழக்கூடிய விடயமாகத்தான் உள்ளது. எமது தமிழர்கள் இவ்வாறான வேலைகளை அதிகளவில் செய்தாலும் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரியளவில் பங்களிப்பது குறைவே. இவ்வாறானவர்களுக்கு இது ஒரு பெருமை தரக்கூடிய விடயமே. என்னைப் பொறுத்தவரை திறமை என்பது ஒவ்வொருவரிடத்திலும் உள்ளது. அதைப் பயன்படுத்தும் சூழலும் சந்தர்ப்பங்களும் வரவேண்டும். முயற்சிசெய்தால் நிச்சயமாக எமது திறமையைப் பயன்படுத்தி முன்னுக்கு வரமுடியும். மொழியை விருத்திசெய்யவேண்டும் எழுத வாசிக்கப் பழகவேண்டும். கதைக்கத் தெரியவேண்டும். ஒவ்வொரு தமிழரும் தமது திறமைகளை வெளிப்படுத்த முன்வரவேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.