தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் மனம் விட்டுப் பேச வேண்டும் என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கருத்து தெரிவிக்கையி தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
தொடா்ந்தும் அவா் கருத்து தெரிவிக்கையில்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டமையினால் தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியை இழந்து விட்டது.
அபிவிருத்தியும் அரசியல் உரிமையும் நம் இரு கண்கள். அதனை எதற்காகவும் விட்டுக் கொடுக்கவியலாது. தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபையையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள்.
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இரா.சம்மந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இருவரும் முதலில் மனம் விட் டுப்பேசவேண்டும். இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான் கூறவரவில்லை.
இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும். மேலும் தந்தை செல்வா போன்றவர்கள் அகிம்ஷை வழியில் போராடினார்கள் பின்னர் புலிகள் ஆயுத வழியில் போராடினார்கள் இப்போது சம்மந்தன் சர்வதேச ஆதரவுடன் போராடி வருகிறார்.
அதேசமயம் நான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிங்கள மக்களிடம் கொண்டு செல்கிறேன். இந்த அரசாங்கம் புலிகள் இருந்த காலத்தில் ஈழம் தவிர எல்லாம் தருகிறோம் என்றார்கள்.
இன்று எதுவும் தரமாட்டோம் என்கிறார்கள். ஆகவே தான் நண்பன் ரவிராஜ் வழியில் இதனை நான் செய்கிறேன் என்றார்.













