யாழ் மாவட்டத்தில் நல்லிணக்க அமைச்சின் முன்னெடுப்பில் 654 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனஅவர்களை அமைச்சராகக் கொண்ட தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் 2017 அம் ஆண்டில் படையினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் 654 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் தையிட்டி, மைலிட்டி, வறுத்தலைவிளான், பலாலி, சண்டிலிப்பாய் பிரதேசங்களில் படையினரால் கட்டம் கட்டமாக அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் 19 உள்ளக வீதிகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன. இதில் 11 வீதிகள் 5 ஆம் திகதி மார்ச் மாதம் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதற்கான கிரயம் ரூபா. 51 மில்லியன் என அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார். இதில் பலாலி தெற்கு வீட்டுத் திட்ட உள்ளக வீதி, தாழையடி வீதி, குகன் வீதி, வைரவர் உள்ளக வீதி, சிவன் உள்ளக வீதி, வேலன் உள்ளக வீதி, துறைமுக உள்ளக வீதி, கலைமகள் உள்ளக வீதி, ஈஸ்வரி உள்ளக வீதி, அம்மன் உள்ளக வீதி, விநாயகர் உள்ளக வீதி, கொட்டுப்புலம் உள்ளக வீதி, வள்ளுவர் உள்ளக வீதி, நான்முகன் உள்ளக வீதி, புன்னாலைக்கட்டுவன் வீட்டுத்திட்ட உள்ளக வீதி, அண்ணாமார் உள்ளக வீதி போன்றவை உள்ளடங்குகின்றன.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கடந்த காலங்களில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட இடங்களான பலாலி வடக்கு, ஊறணி, பொலிகண்டி மற்றும் அராலி ஆகிய இடங்களில் இறங்குதுறை மற்றும் படகு கட்டுமிடங்களுக்கு 296.00 மில்லியன் ரூபா 2017 அம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் இவ்வருடம் நடைபெற்று வருகின்றன. அத்துடன் நாகர்கோவில் பிரதேசத்தில் 78 படகுக்கு வெளியிலான மீன்பிடி மோட்டார் இயந்தியரங்கள் சண்டிலிப்பாயில் மீன்பிடி ஏலவிற்பனைத் தளம், மீன்வலைகள் திருத்துமிடம், மீனவர்கள் இளைபாறுமிடம் என்பனவும் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன என அமைச்சின்
செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.
அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் 115 கிணறுகள் புனரமைக்கப்பட்டன. இடம்பெயர்ந்த மீள்குடியேறிய மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிறுவர் பராமரிப்பு மற்றும் மகப்பேறு பிரிவுகளுக்கு 70 மில்லியன் ரூபாவில் நவீன மருத்துவ உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உபகரணங்கள் பாவனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புற்றுநோய் வைத்தியசாலைக்கு வெளிநோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதிக்கு 16.2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 2 கட்டடத் தொகுதிகள் அமைக்கும் வேலைத்திட்டம் 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிப்கப்பட்டு இவ்வருடம் முடுவுறுத்தப்படும்.
பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் கரவெட்டி வேதாரணிய வித்தியாலயத்திற்கு 2 மாடி கட்டடமும், யாழ் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு கணிணி ஆய்வுகூட அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு 2017 இல் நிதி ஒதுக்கப்பட்டதுடன் இவ்வருடம் முடிவுறுத்தப்படும். யாழ் பல்கலைக்கழகத்திற்கு நெகிழும் தன்மையுடன் கூடிய செயற்கைக் கால்களை உற்பத்தி செய்வதற்கும் கற்கை வசதிகளை மேம்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் 9 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டு அவை பாவனையிலுள்ளது என அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.