Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண் பற்றித் தெரியுமா?!

April 3, 2018
in News, Politics, World
0
உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண் பற்றித் தெரியுமா?!

கமலா தேவி சட்டோபத்யாய் –  யார் இவர் என்பவர்களுக்கு… சுதந்திரப் போராளி, சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, கைத்தறி வளர்ச்சிக்கும், நாடக மறுமலர்ச்சிக்கும் தூண்டு சக்தியாக இருந்தவர், பெண்களின் பொருளாதார உயர்வுக்குப் போராடியவர் என்று கமலா தேவியைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு தான் வாழ்ந்துவிட்டு போனதுக்கான சரித்திர தடத்தை பலமாக பதித்தவர். அதனால்தான் கூகுள் இன்றைக்கு கமலா தேவியின் 115-வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

கமலாதேவி ஏப்ரல் 3, 1903 – ம் வருடம் மங்களூரில் பிறந்தார். அப்பா ஆனந்தையா, அம்மா கிரிஜா பாய். வீட்டுக்கு நான்காவது மகள் கமலாதேவி. ஏழு வயதில் தன் அப்பாவை பறிகொடுத்த கமலாவின் குழந்தைப்பருவம் மிகுந்த துன்பங்களையும், துயரங்களையும் கொண்டது. தவிர, அந்தக்கால வழக்கப்படி கமலாவுக்கு 14 வயதிலேயே திருமணம் செய்து வைத்தார் அவருடைய அம்மா. ஆனால், இரண்டே வருடத்தில் கணவர் அகால மரணமடையக் கமலாவின் வாழ்வில் அடுத்தது என்ன என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்து நின்றது.
இந்தக் கேள்விக்குப் பதிலை தேட கமலாதேவி தேர்ந்தெடுத்த வழிகள்தான், இன்றைக்கும் அவரை நாம் அனைவரும் நினைவு கூர்வதற்குக் காரணம்.
கணவர் இறப்புக்குப் பிறகு, விட்டுப்போன தன் கல்வியைத் தொடர்கிறார். நான்கு வருடங்களுக்குப் பிறகு, அரிந்திரநாத் சட்டோபாத்யாய் என்பவரை விரும்பி மறுமணம் செய்துகொள்கிறார். மறுமணமா என்று அதிர்ந்தவர்கள் திருமணப் பரிசாக கமலாவுக்குத் தந்தது என்னவோ முட்களும், அதைவிடக் கூரான விமர்சனங்களையும்தான். அத்தனை வலிகளையும் துடைத்தெறிந்துவிட்டு, கணவருடன் லண்டனுக்குச் சென்றவர் அங்கு சமூகவியல் பாடத்தில் டிப்ளமோ பட்டம் பெற்று இந்தியா திரும்புகிறார்.

இந்தியா வந்ததும் கணவருடன் இணைந்து மேடை நாடகங்களை அரங்கேற்றியவர், அதன் தொடர்ச்சியாக விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார் கமலா. இந்தச் சமயத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொள்ளக் காந்தியடிகள் அனைவருக்கும் அழைப்புவிட, இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த கமலா தேவி தீவிர சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார்.

இதன்பிறகு கமலா தேவி செய்ததெல்லாம் வரலாறே கைதட்டிய, அழிக்க முடியாத வரலாறுகள்.
சென்னை மாகாண சட்டசபைக்குப் போட்டியிட்டார் கமலாதேவி. அத்தோடு, இந்தியாவில் சட்ட மன்றத்துக்குப் போட்டியிட்ட முதல் பெண் என்கிற மகுடத்தைச் சூடிக்கொண்டார்.

காந்தியின் உப்பு சத்தியாகிரக குழுவில் இவரும் ஒருவர். மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவின் சார்பாக உப்பை எடுக்கச் சென்றபோது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண்ணும் கமலாதேவிதான்.

இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்த பிறகு, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரதியில் கையெழுத்திடும் சிறப்புரிமைப் பெற்ற இந்திய தேசிய தலைவர்களில் கமலாதேவியும் ஒருவர். இவர் மட்டுமே அந்தத் தலைவர்களில் பெண் என்பதைத் தனித்து சொல்ல வேண்டியதில்லை.

இந்திய விடுதலைக்குப் பிறகு, கமலாதேவியின் செயல்பாடுகள் அத்தனையும் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், கைவினைப் பொருட்களின் வளர்ச்சிக்கும், நம்முடைய பாரம்பர்ய கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கும் என மடை மாறியது. நாடகத்துறையின் வளர்ச்சிக்காகவும் இயங்கியவர் இவர். இதனால், சங்கீத நாடக அகாடமியின் தலைமைப் பொறுப்பையும் சில காலம் அலங்கரித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நம்முடைய பாரம்பரிய கலைகளை, கலாச்சாரங்களைக் காப்பாற்ற அதிகம் மெனக்கெட்டவர் கமலா தேவி என்பதால், ‘இந்தியாவின் கலாச்சார ராணி’ என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா, சென்ட்ரல் காட்டேஜ் இன்டஸ்ட்ரீஸ் எம்போரியம், கிராப்ட் கவுன்சில் ஆப் இந்தியா போன்ற பல புகழ்பெற்ற நிறுவனங்களின் இருப்பைத் தொடர வைத்தார்.

கமலாவின் அத்தனை பணிகளையும் பாராட்டும் விதமாக, இந்திய அரசு பத்ம பூஷன் விருதும் (1955), பத்ம விபூஷன் (1987) விருதையும் அளித்துக் கௌரவித்தது. இவைத் தவிர, ராமன் மகசேசே விருது, சங்கீத் நாடக அகாடமி விருது, இந்திய தேசிய அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல விருதுகளும் இவரிடம் வந்து சேர்ந்து பெருமை பெற்றன.

இந்திய விடுதலைக்காக, பெண்களின் பொருளாதாரத்துக்காக, பாரம்பரிய கலைகளுக்காக, கைவினைப் பொருட்களுக்காக என ஓடி ஓடி உழைத்த கமலா தேவி, தன்னுடைய 85-வது வயதில், 1988, அக்டோபர் 29 அன்று இவ்வுலக வாழ்வை விட்டு ஓய்வு பெற்றார்.

Previous Post

மோடியுடன் பன்வாரிலால் சந்திப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆய்வு

Next Post

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக முன்னேற்றம்

Next Post

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக முன்னேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures