இலங்கை நாட்டின் கலைத்துறைக்கு உன்னதமான சேவைகளை வழங்கிய மூவினத்தையும் சார்ந்த கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கும் 33வது கலாபூஷண அரச விருது வழங்கள் விழா நேற்று (12) செவ்வாய்க்கிழமை கொழும்பு-07 இல் உள்ள நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
உள்ளக அலுவல்கள் வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றினைந்து உள்ளக அலுவல்கள் வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன மற்றும் பிரதி அமைச்சர் பாலிததேவப் பெரும ஆகியோரின் தலைமையில் இவ்வைபவம் இடம் பெற்றது.
இதன்போது சிங்கள கலைஞர்கள் 170 பேரும், தமிழ் கலைஞர்கள் 20 பேரும், முஸ்லிம் கலைஞர்கள் 10 பேரும் இவற்றிற்கு மேலதிகமாக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 40 பேருக்குமாக மொத்தம் 240 பேருக்கு தலா 25000.00 ரூபா வீதம் பொற்றிகிழியுடன் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. சுவர்ணபால, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அனுஷா கோகில பர்ணாந்து, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் ஹப்புஆரச்சி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மும்மதங்களினதும் கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.
விருது பெற்ற முஸ்லிம் கலைஞர்களின் படங்களைக் காணலாம். இதில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்வர்களில் ஸ்ரீலங்காக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மட்டுமே முஸ்லிம் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
