ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக மத்திய கிழக்கு, ஆசியா, வட ஆபிரிக்கா நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பல நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு இந்த சர்ச்சைக்குரிய முடிவை எதிர்த்து வருகின்றனர்.
உலகின் பல பிரதான நகரங்களின் சதுக்கங்கள் மற்றும் வீதிகளில் ஞாயிறன்று பலஸ்தீன கொடிகளை அசைத்தவாறு, பலஸ்தீனர்களுக்கும் தமது ஆதரவை வெளியிடும் கோசங்களுடன் மக்கள் ஒன்று திரண்டனர். ஜெரூசலம் தமது எதிர்கால பலஸ்தீன நாட்டின் தலைநகர் என பலஸ்தீனம் கருதுகிறது.
ஜெரூசலம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான பதற்றத்தை அதிகரித்திருப்பதோடு இந்த அறிவிப்புக்கு எதிராக தொடர்ந்தும் பலஸ்தீனத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இதேவேளை, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
துருக்கியின் ஸ்தன்பூல் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் கூடியதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க துணைத் தூதரகத்தை நோக்கி பேரணி நடத்தியபோதும் கலகம் அடக்கும் பொலிஸார் அவர்களை திருப்பி அனுப்பினர்.
உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வரும் யெமன் மற்றும் சிரியாவிலும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவளித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
எகிப்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு, அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

