Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சேக்கிழார் யார்?

December 5, 2017
in News
0

“கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னாலும் சொன்னார்… அது குறித்து கிண்டலும் கேலியாகவும் சமூகவலைதளங்களில் எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

போகட்டும்..பழந்தமிழ் நாயகர்கள் பலரை நாம் மறந்துவிட்டோம். எடப்பாடி மூலமாகவாவது ஒருர இலக்கிய நாயகரின் பெயர் அடிபடுகிறதே. அவதுவரை மகிழ்ச்சிதான்.

இதோ.. சேக்கிழார் புராணத்தை.. அதுதான்.. அவரது வரலாற்றைப் பார்ப்போம்.

பெரியபுராணத்தின் ஆசிரியர் சேக்கிழார் ஆவார். இவரது இயற்பெயர் அருண்மொழித் தேவர் என்பதாகும். இளமையில் இந்தப் பெயரிலேயே அழைக்கப்பட்டார். இவரது உடன் பிறந்தார் பாலறாவாயர் என்பவர்.

சேக்கிழார் பிறப்பு

தமிழ்நாட்டின் வடபகுதியைப் பண்டைய காலத்தில் தொண்டை நாடு என்று கூறுவர். இந்நாட்டைப் பல பகுதிகளாகப் பிரித்து இருந்தனர். இப்பகுதிகளைக் கோட்டம் என்று அழைப்பர். அவ்விதம் பிரிக்கப்பட்ட 24 கோட்டங்களுள் புலியூர்க் கோட்டமும் ஒன்று. இப்புலியூர்க் கோட்டத்தின் உள் பிரிவாகிய குன்றைவள நாட்டின் தலைநகரம் குன்றத்தூர் ஆகும். இவ்வூரில் வாழ்ந்த வேளாளர் குலத்தில் சேக்கிழார் பிறந்தார்.
சேக்கிழார்
குடியும் குடியேற்றமும்

பண்டைநாளில் கரிகால் சோழமன்னன் நாற்பத்து எண்ணாயிரம் வேளாளர் குடும்பங்களைத் தொண்டை நாட்டில் குடி அமர்த்தினான். அவற்றுள் ஒன்றே சேக்கிழார் பிறந்த குடியும். உழவுத் தொழிலில் மேம்பட்ட வேளாளர் குடியில் சேக்கிழார் குடும்பம் சிறப்பு மிக்கது. இக்குடும்பமே சேக்கிழார் பிறந்த குடும்பம்.

சோழ நாட்டில் அமைச்சர் பணி

அருண்மொழித் தேவர் இளமையிலேயே கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கினார். இதனை அறிந்த சோழ மன்னன் அவரைச் சோழநாட்டின் அமைச்சராக நியமித்தான். உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டத்தையும் தந்து சிறப்பித்தான். அருண்மொழித்தேவர் சிறந்த சிவ பக்தர். சோழநாட்டுச் சைவக் கோயில்களில் ஒன்றாகிய திருநாகேசுவரம் கோயிலின் இறைவனிடத்தில் மிகுந்த பக்தி உடையவர். இக்கோயில் போன்றே தனது ஊராகிய குன்றத்தூரில்திருநாகேசுவரம் என்ற பெயரில் கோயில் ஒன்றைக் கட்டினார்.

காப்பியம் எழுதியமை

சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் சைவ சமயத்தார் பலர் வேற்றுச் சமய இலக்கியங்களில் சுவை கண்டு மூழ்கிப் போய் இருந்தனர். இதற்குச் சோழ மன்னனும் விதிவிலக்கல்ல. சோழ மன்னன் சமண சமயக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியில் மூழ்கிக் கிடந்தான். காப்பியச் சுவையில் ஆழ்ந்து கிடந்தான். இதனைக் கண்ட சேக்கிழார் சமண சமயக் காப்பிய மயக்கத்திலிருந்து சோழ மன்னனை மீட்க எண்ணினார். சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதிஆகிய நூல்கள் பற்றி மன்னனிடம் எடுத்துக் கூறினார். சிவனடியார்களின் வரலாற்றைக் கேட்டு மகிழ்ந்தான் மன்னன். இறைவனின் அருளைப் போற்றினான்; சிவனடியார்களை வணங்கினான். அடியார்களின் வரலாறுகளை யாவரும் அறிந்துகொள்ளும்படி செந்தமிழ்ப் பெருங்காப்பியமாகப் பாடுமாறு சேக்கிழாரைக் கேட்டுக்கொண்டான்.

இறைவன் அருள் பெற்றமை

அரசனது வேண்டுகோளை ஏற்றுச் சேக்கிழார் தில்லையை அடைந்தார் (தில்லை = சிதம்பரம்). சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். காப்பியம் பாடுவதற்கு இறைவன் அடியெடுத்துக் (காப்பியம் பாடுவதற்கு முதல் சொல்லை எடுத்துக் கூறுதல்) கொடுத்தார். “உலகு எலாம்” என்ற ஒலி வானில் ஒலித்தது. இதனைக் கேட்டுத் தில்லை வாழ் அந்தணர்கள் மகிழ்ந்தனர். இறைவனுக்குச் சாற்றிய திருநீற்றையும் (விபூதி) மாலையையும் சேக்கிழாருக்கு அணிவித்தனர். சேக்கிழாரும் மகிழ்ந்து தில்லையில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து காப்பியம் பாடத்தொடங்கினார். இறைவன் அடியெடுத்துக் கொடுத்த “உலகு எலாம்” என்ற சொல் தொடரை முதல் செய்யுளின் முதல் சீராக அமைத்தார். சிவனடியார்கள் அறுபத்து மூவரின் வரலாற்றையும் பாடி முடித்தார்.

பெரியபுராணம் அரங்கேற்றம் செய்தமை

காப்பியம் பாடி முடிக்கப்பெற்ற செய்தி அறிந்த சோழ மன்னன்தில்லையை அடைந்தான். சேக்கிழாரும் தில்லை வாழ் அந்தணர்களும்மன்னனை எதிர் கொண்டு அழைத்தார்கள். சேக்கிழாரின் சிவ வேடப்பொலிவைக் கண்ட மன்னன் அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அப்போது “வளவனே! சேக்கிழார் செய்த அடியார் வரலாற்றை நீ கேட்பாயாக” என்று வானத்தில் ஓர் ஒலி எழுந்தது. இதனைக் கேட்டு அனைவரும் பரவசம் அடைந்தனர்.

தொண்டர் கூட்டம்

திருத்தொண்டர் புராணத்தைக் கேட்க வருமாறு சிவனடியார்அனைவருக்கும் மன்னன் திருமுகம் (கடிதம்) அனுப்பினான். சைவத் தத்துவ அறிஞர்களும், புலவர்களும், சிற்றரசர்களும் தில்லையில் குழுமினர். சேக்கிழாரும் சித்திரைத் திங்களில் திருவாதிரை (27 நட்சத்திரங்களுள் ஒன்று) நாளில் பெரியபுராணத்தைக் கூறத் தொடங்கினார். அடுத்த ஆண்டு சித்திரைத் திங்கள் அதே திருவாதிரை நாளில் கூறி முடித்தார். தில்லை வாழ் அந்தணர்கள் பெரியபுராணத்தைச் சிவனாக எண்ணி வழிபட்டனர்.

மன்னனின் சிறப்புப் பெற்றமை

சோழ மன்னன் பெரியபுராணத்தை யானை மீது ஏற்றிச் சேக்கிழாரோடு தானும் யானை மீது அமர்ந்து வெண்சாமரம் (ஒருவகை விசிறி) வீசினான். யானையும் வீதி உலா வந்தது. சேக்கிழாரும், மன்னனும், அடியார்கள் புடைசூழக் கோயிலுக்கு வந்து நடராசர் முன்பு பெரியபுராணத்தை வைத்து வழிபட்டனர். மன்னன் சேக்கிழாருக்குத் தொண்டர் சீர்பரவுவார் (அடியார் புகழைப் போற்றுபவர்) என்ற பட்டத்தை வழங்கி வணங்கினான். பின்னர் மன்னன் பெரியபுராணத்தைச் செப்பு ஏட்டில் எழுதித் திருமுறைகளில் ஒன்றாக, பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்த்து வைத்தான். சேக்கிழாரின் இந்த வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்ற நூல் விரிவாக விளக்கி உள்ளது.

Previous Post

மன்னார் – தலைமன்னார் வீதிப் பகுதி மயானத்தில் இருந்து 15 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன

Next Post

ஜெயலலிதாவின் இறுதி நாட்கள்!

Next Post
ஜெயலலிதாவின்  இறுதி நாட்கள்!

ஜெயலலிதாவின் இறுதி நாட்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures