சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான பாகிஸ்தான் தோழியை பார்ப்பதற்காக சென்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தனது மகனின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என இந்தியாவை சேர்ந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார். மும்பையை சேர்ந்தவர் இன்ஜினியர் ஹமீத் அன்சாரி. இவருக்கு பேஸ்புக் மூலமாக பாகிஸ்தானின் கோஹட் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் இளம்பெண் தன்னுடைய உரிமைகள் மறுக்கப்படும் என அஞ்சுவதாக தெரிவித்ததை அடுத்து அவரை மீட்பதற்காக அன்சாரி திட்டமிட்டார். ஆனால் பாகிஸ்தான் செல்வதற்கு அவரிடம் விசா இல்லை. எனவே, அவர் ஆப்கானிஸ்தான் சென்று பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். கோஹட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அன்சாரி கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அன்சாரியின் தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாய் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹூசைனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், “ ஹமீத் அன்சாரியை விட பயங்கரமான குற்றம் புரிந்த வெளிநாட்டினருக்கு உங்கள் அரசு கருணை காட்டியுள்ளது.
ஹமீத் அன்சாரியின் சிறை தண்டனையை நீங்கள் ரத்து செய்தால் இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுவிக்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்தினருடன் போனில் பேசுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே பாகிஸ்தான் பெண்ணிற்கு உதவுவதற்காக வந்து சிக்கலில் சிக்கிக்கொண்ட ஹமீத் அன்சாரிக்கு உதவி செய்வதற்கு முயற்சி செய்த பாகிஸ்தான் பெண் நிருபர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் கடந்த அக்டோபர் மாதம் அவர் மீட்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில் மீண்டும் மாயமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.