ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி பெங்களூர் பெண் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார்.
அவர் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மகளாக தன்னை அறிவிக்க கோரி பெங்களூரூவை சேர்ந்த அம்ருதா என்கிற மஞ்சுளா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருகிறேன். மஞ்சுளா என்கிற அம்ருதா என்பது எனது பெயர்.
1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ஜெயலலிதாவின் மகளாக நான் பிறந்தேன். என் வளர்ப்பு தாய் சைலஜா 2015-ல் இறந்துவிட்டார்.
வளர்ப்பு தந்தை சாரதி கடந்த மார்ச் 20-ம்தேதி இறந்துவிட்டார். நான் பிறந்ததிலிருந்து பெங்களூருவில் வசித்து வருகிறேன்.
நான், ஜெயலலிதாவுக்குதான் பிறந்தேன் என்கிற உண்மை எனக்கு மார்ச் மாதம்தான் தெரியும். ஜெயலலிதாதான் என் தாய் என்பதை நிரூபிக்க மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் அவரது மரணத்தின் போது அவருக்கு வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தி இருக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் இந்த உண்மை இத்தனை நாட்களாக வெளிப்படுத்தப்படவில்லை.
அவர் என் தாய்தான் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்தால் உண்மை வெளியே வரும் என கூறியுள்ளார். அம்ருதாவின் கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.
நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை ஆய்வு செய்ய இருக்கிறது. அம்ருதாவின் மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது பிற்பகலில் தெரிய வரும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் மகன் எனக் கூறி ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜெ. கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில் ‘தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த நடிகர் சோபன்பாபு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது மகன் ஆவேன். 1985-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி நான் பிறந்தேன்.
நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1986-ம் ஆண்டு காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு, மறைந்த முதலமைச்சர் எம். ஜி. ஆர். முன்னிலையில் என்னை தத்துக்கொடுத்துவிட்டனர்.
இதற்கான ஒப்பந்தத்தில், என் பெற்றோர் சோபன்பாபு, ஜெயலலிதா மற்றும் எம். ஜி. ஆர். ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர் எனக் கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதி மன்றம் அதனை காவல் துறையை வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
தவிர ஏற்கனவே ஒரு பெண் ஒருவரும் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது பலத்த பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது