உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மேன்முறையீடு செய்தமைக்கு கூட்டு எதிர்க்கட்சியே காரணம் என பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா குற்றம்சாட்டினார்.
தேர்தலைப் பிற்போடுவதாக அரசாங்கத்திற்கு எதிராக விரல் நீட்டியவர்களே தேர்தலை ஒத்திப்போட மனுத் தாக்கல் செய்வது வெட்கப்பட வேண்டிய ஒரு செயலாகும் எனவும் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கூட்டு எதிர்க் கட்சியினர் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டமைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைக் குற்றம் சாட்டினர். இவ்வாறு மனுத் தாக்கல் செய்த ஆறு பேரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களின் முன்னணி செயற்பாட்டாளர்களே காணப்படுவதாகவும் ஒவ்வொரு பெயரையும் குறிப்பிட்டு அடையாளப்படுத்தினர்.
ஸ்ரீ ல.சு.க.யின் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கூட்டு எதிர்க் கட்சி முன்வைப்பதாயின் தாம் அக்கட்சிக்கு எதிராக செயற்பட வேண்டி ஏற்படும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா சபையில் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.