Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறோம் – குஞ்சித்தம்பி ஏகாம்பரம்

November 13, 2017
in News, Politics
0

இழந்தவைகள் இழந்தவைகளாக இருக்கட்டும். இருப்பவைகளையாவது எமது சந்ததியினரை காப்பாற்ற வேண்டும். இதனால் நடந்தவைகளை மறந்து இரு சமூகங்களும் இணைந்து வாழவே விரும்புகிறோம். கல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள். ஆனால் எதையும் இழந்து வாழ விரும்பவில்லை. இவ்வாறு கூறுகிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எல்லைக்காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம். கல்முனையின் இன்றைய சமகால நிலைவரம் மீண்டும் முறுகல்நிலைக்கு இட்டுச்செல்வதாக தெரிகிறது. இது தொடர்பில் இரு சமூகங்களிலும் சாத்வீகவாதி எனப்பெயரெடுத்த அவரது கருத்துக்களைக் கேட்டபோது…

கல்முனை வரலாறு

கரவாகுப்பற்றின் எல்லை தெற்கே மாளிகைக்காட்டு வீதியையும் வடக்கே கோட்டைக்கல்லாறையும் கொண்டுள்ளது. இதில் கல்முனை அதிகாரமுடைய மூன்று குறிச்சிகளாகவும் இதற்குரிய கிராம தலைவர்கள் தமிழர்களாகவுமே இருந்தனர்.இதன் எல்லை வடக்கே பாண்டிருப்பு- கல்முனை எல்லை வீதியையும் தெற்கே தரவைக் கோயில் வீதியையும் உள்ளடக்கியது. இவ்வெல்லையிலிருந்து தெற்கே கல்முனைக்குடியில் அதிகாரங் கொண்ட ஐந்து குறிச்சிகளில் முஸ்லிம்கள் கிராமத் தலைவர்களாக இருந்தார்கள்.

கல்முனை சுகாதார சபையாய், உள்ளூராட்சி சபையாய் இருந்து பட்டின சபையாய் மாற்றமடைய வேண்டுமென்ற நோக்கோடு கல்முனைக்குடியையும் இணைக்க வேண்டுமென்ற நோக்குடைய முஸ்லிம் தலைவரொருவர் எடுத்த முயற்சிக்கு கல்முனையின் வடபுறம் தமிழர்களை உள்ளடக்கிய பாண்டிருப்பையும் சேர்க்க வேண்டுமென்ற நியாயமான கருத்தை ஜீரணிக்க முடியாத முஸ்லிம் தலைவர் பிரித்தானிய ஆட்சி தலைவரை அணுகி இதற்கு ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென்ற யோசனையை முன்வைத்த போது முஸ்லிம் தலைவரால் ஒரு தமிழ்க் கல்விமானின் பெயர் குறிப்பிடப்பட்டு தனியான ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் தமிழர்களின் பிற்கால நலன் கருதாது கல்முனையுடன் கல்முனைக்குடியையும் இணைத்து பட்டின சபைக்கு அங்கீகாரம் அளித்தார்.

இதன் பிரகாரம் கல்முனை தமிழ் கிராமத் தலைவர்கள் அடங்கிய மூன்று குறிச்சிகளையும் கல்முனைக்குடியின் முஸ்லிம் கிராமத் தலைவர்கள் அடங்கிய ஐந்து குறிச்சிகளையும் உள்ளடக்கிய பட்டின சபையில் மூன்று தமிழர்களும் ஐந்து முஸ்லிம்களையும் கொண்ட எட்டு வட்டாரங்கள் அமைய வேண்டிய நிலையில் வஞ்சக ஆசை வலையில் அகப்பட்ட தமிழ்க் கல்விமான் தமிழர்களிற்கு துரோகம் விளைவித்து தமிழ்க் குறிச்சிகளில் ஒன்றான தமிழர்கள் வாழும் மூன்றாம் குறிச்சியை மாரியார் வீதியிலிருந்து இரண்டாகப் பிரித்து வடபுறமுள்ள இரண்டாம் குறிச்சி தமிழர்களுடன் இரண்டாம் வட்டாரமாகவும் தெற்கே கல்முனைக்குடி முஸ்லிம் கிராமத்தலைவர் பகுதியுடன் இணைத்து மூன்றாம் வட்டாரமாகவும் பிரித்ததனால் ஏழு வட்டாரங்களாக்கப்பட்டது.

இதனால் தமிழர்கள் மூன்று பேர் வரவேண்டிய இடத்தில் இரண்டு அங்கத்தவர்கள் வரவேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து முஸ்லிம் சகோதரர்களே தலைவர்களாக வரும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்ப் பிரிவிற்குள் அரச காணிகளும் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரிய சந்தாங்கேணி குளம், தாழையடிக் குளம் போன்ற வளங்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தது.

1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டம் உருவாகிய போது கரவாகுப்பற்றுடன் கோட்டைக் கல்லாறு பெரிய கல்லாறு, துறைநீலாவணை ஆகிய கிராமங்கள் கல்முனைத் தொகுதியுடன் இணைந்திருந்தன. இக்கிராமங்களில் இருந்தவர்கள் 100% தமிழர்கள் ஆவர். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடந்திருப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழரொருவர் வந்திருப்பார்.

இதனை விரும்பாத முஸ்லிம் தலைவர் கரவாகுப்பற்றுடன் இணைந்திருந்த கோட்டைக் கல்லாறு, பெரிய கல்லாறு, துறைநீலாவணை ஆகிய கிராமங்களை பட்டிருப்புத் தொகுதியுடன் சேர்ப்பதற்கு பட்டிருப்பு தொகுதியை சேர்ந்த தமிழ் அரசியல் தலைவரும் கல்விமானுமாகிய ஒருவரை அணுகினார். இதனால் தனக்கு அதிக பலன் இருப்பதாக கருதிய தமிழ்த் தலைவர் இதற்கு சம்மதித்தார். இதன் காரணமாக கல்முனையில் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழரொருவர் வரும் வாய்ப்பு இழக்கப்பட்டது.

பட்டினசபைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம்களாக இருந்தமையால் தமிழ் பிரதேசத்திலுள்ள அரச காணிகள், நீர்ப்பாசன குளங்கள் ஆகிய வளங்கள் அனைத்தும் வியாபார நோக்கத்திற்காகவும் அத்துமீறிய குடியேற்றத்திற்காகவும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதனால் தமிழர்களின் இருப்புகளில் பாதிப்பு ஏற்பட தொடங்கியது. 1967 இல் திட்டமிட்டு கல்முனை முதலாம் குறிச்சியில் தமிழர் பகுதியில் முஸ்லிம்கள் தென்னை, வாழை போன்ற மரங்களை நட்டு அத்துமீறி கொட்டில்களும் அமைத்ததனால் இரு சமூகங்களுக்குமிடையில் குழப்பநிலை ஏற்பட்டு இதனால் கல்முனை மூன்றாம் குறிச்சியில் சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு தமிழர்கள் பெரும் இழப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் உந்துசக்தியாக இருந்தனர்.

1986 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக கல்முனையில் நடந்த இனக்கலவரத்தினால் கல்முனை மூன்றாம் குறிச்சியும் கல்முனை இரண்டாம் குறிச்சியின் சிறு பகுதியும் தீக்கிரையாக்கப்பட்டு வீடுகளும் சூறையாடப்பட்டது. அத்துடன் ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயம், கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம் என்பன தரைமட்டமாக்கப்பட்டன. மக்கள் அஞ்சி கிராமத்தை விட்டு வெளியேறி அகதிகளாக அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர்.

2004 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கென வெளிநாட்டிலுள்ள பெரும் தனவந்தராகிய இராசரெட்ணம் அன்று வீடமைப்பு அமைச்சராக இருந்த திருமதி பேரியல் அஷ்ரபிடம் தொடர்மாடி வதிவிட வீடுகள் கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்பட்டது.

உரிய தொடர்மாடி வீடுகள் கல்முனை முதலாம் குறிச்சியில் கட்டப்பட்டது. கட்டி முடிவடைந்தததும் இவ்வீடுகள் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களை சமனாக சென்றடைய வேண்டுமென்பதே அவருடைய வேண்டுகோள். ஆனால் ஒரே இரவில் அத்தனை வீடுகளும் முஸ்லிம் மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது.

கல்முனை பட்டின சபையாய் இருந்த காலந்தொட்டு மாநகர சபையாக இருக்கும் காலம் வரை அபிவிருத்திகளில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு மாற்றாந்தாய் மனப்பாங்குடனே நடத்தப்பட்டு வருகின்றன.
சமீப காலமாய் கல்முனையின் பூர்வீகம் தெரியாதவர்கள் பூர்வீகவாழ் தமிழர்களை புறந்தள்ளி கல்முனை முஸ்லிம்களின் பிரதேசம், இதயம், முகவெற்றிலை, தலைநகர் என்று பத்திரிகை மகாநாடுகளை நடாத்தி பிரகடனப்படுத்தியுள்ளனர்.

பூர்வீக வதிவிடம் கல்முனைக்குடி என்பதை மறைத்து கல்முனை தான் தாயகம் என்ற தொனியில் பேசுகிறார்கள். இதன் மர்மம் என்ன? கல்முனைக்குடியின் மக்கள் தொகையையும் வளங்களையும் இணைத்து கல்முனை எங்களுடையது என்பதை நிலைநிறுத்துவதற்காக வேண்டித்தான் இந்த நெருக்குவாரங்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய கலாசாரம் ஒன்றை ஏற்படுத்த தமிழர்கள் முனைவார்கள் எனின் குரோத மனப்பான்மையுடன் செயல்படுபவர்களே அவர்களின் பின் சந்ததியினருக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனை மிக வேதனையுடன் அறியத்தருகின்றேன்.

கல்முனைக்குடி எனும் பெயர் ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகிறது. இதனை வதிவிட நிலங்களின் உறுதிகளில் புரட்டிப் பார்க்கலாம். உதாரணமாக 1989 ஆம் ஆண்டு மூன்று பிரிவுகளாக இருந்த கல்முனை பதின்மூன்று பிரிவுகளாகவும் ஐந்து பிரிவுகளாக இருந்த கல்முனைக்குடி பதினான்காகவும் அமையப்பெற்றது. கல்முனை உதவி அரசாங்கப்பிரிவில் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் கிராமோதய தலைவர்கள் உருவாக்கப்பட்டனர்.

அதில் நீலாவணைக்கு 2, மருதமுனைக்கு 2, பாண்டிருப்புக்கு 2, நற்பட்டிமுனைக்கு 2, கல்முனைக்கு 3, கல்முனைக்குடிக்கு 5, சாய்ந்தமருதுக்கு 4 என வகுக்கப்பட்டது.சாய்ந்தமருது தமிழர்களும் முஸ்லிம்களும் மிக சந்தோசமாக சகோதரர்கள் போல வாழ்ந்து வந்தனர்.

தமிழர்களுக்கு 3 கோயில்களும் மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையொன்றும் மயானமும் தமிழ் குறிச்சி என்ற பெயரில் ஒன்றும் அதற்கென தமிழ் கிராம அதிகாரியொருவரும் கிராம சபை தேர்தலில் இரு தமிழ் பிரதிநிதிகளும் இருந்தனர்.

இந்த நிலையில் 1967 இல் கல்முனையில் ஏற்பட்ட தமிழ்,முஸ்லிம் பிரச்சினையின் எதிரொலியால் உணர்ச்சிவசப்பட்ட சில விஷமிகளால் எடுக்கப்பட்ட சுத்திகரிப்பில் மேற்குறிப்பிட்ட வளங்கள் அத்தனையையும் கைவிட்டு தமது தாயகத்திலிருந்து தமிழர்கள் அனைவரும் படிப்படியாக வெளியேறினர். தமிழர்கள் இருந்தார்கள் என்பதற்கான தடயங்கள் யாவும் அழிக்கப்பட்டன.

கல்முனை மாநகர சபையில் இருந்து சாய்ந்தமருது தனியான பிரதேச சபையாய் அமைய வேண்டுமென்ற அவர்களது நியாயமான கோரிக்கையை அவர்களது அரசியல் தலைவர்களும் அங்கீகரித்தனர்.

கல்முனை தற்போது உள்ளவாறு மாநகர சபையாய் இருந்தால் முஸ்லிம்கள் 70% உம் தமிழர்கள் 30ம% உம் இருப்பார்கள். சாய்ந்தமருது பிரிந்தால் முஸ்லிம்கள் 60% உம் தமிழர்கள் 40ம% உம் ஆக்கப்படுவர்.

தப்பித்தவறி தமிழர் ஒருவர் நகரபிதாவாக வந்துவிடுவார் என்ற அச்ச உணர்வு காரணமாக கல்முனைக்குடியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் சாய்ந்தமருது பிரிந்தால் எஞ்சிய பிரதேசங்களை மூன்றாக பிரிக்க வேண்டுமென வாதாடியமையால் தலைமைகட்குள் தளர்ப்பம் ஏற்பட்டு ஏட்டிக்குபோட்டியாய் இரு பிரதேசங்கட்கிடையிலும் கடையடைப்பு வீதித்தடை பேரணிகளை நடாத்தி வருகின்றனர்.

இதில் எப்பகுதியும் தமிழர்களின் ஒத்துழைப்பை நாடவோ அவர்களின் விருப்பை அறியவோ விரும்பாது ஓரங்கட்டும் ஏற்பாடுகளில் இறங்கி உள்ளனர். இதனால் கல்முனையை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களை இறந்தகாலம் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது.

இதனால் பிற்கால சந்ததியினரின் நலன்கருதி சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

Previous Post

பிரான்சில் அமைச்சர் பைசருடன், JMC – I பிரதிநிதிகள் சந்திப்பு

Next Post

ரோஹிங்யா அகதிகள் விவகாரம் – தேரருக்கு பிணை.!

Next Post

ரோஹிங்யா அகதிகள் விவகாரம் - தேரருக்கு பிணை.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures