மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இனமுறுகல்கள் தோன்றியுள்ளன.
இந்த முறுகல் நிலைகளுக்கு பொலிஸார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் ஆகியோரே மூலக்காரணம்.
கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியில் பேருந்து தரிப்பு நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் முச்சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டதனால் தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. ஆனால், இது தொடர்பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொலிஸார் இவ்வாறு கடமை தவறுவது தொடர்பில பொலிஸ் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று, சட்டத்தையும், நீதியையும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுப்பேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகக் காணப்படுகின்ற போதிலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எமது மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஒரு நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமாயின் அந்நாட்டின் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டியதுடன், அவர்களது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்” என்றார்.