புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை” என்ற வாசகம் தாங்கிய ஸ்டிக்கர்களை வாகனங்களில் இரகசியமாக ஒட்டும் கும்பல் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாகன உரிமையாளர்களின் அனுமதியின்றி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் இவ்வாறு இரகசியமாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.
சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டும் கும்பலுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வரும் சிறிய குழுக்கள் பிரபல்யமான இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டிவிட்டு சென்று விடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் சன நெரிசல் மிக்க நகரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், பல்பொருள் அங்காடிகளுக்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், வாகன தரிப்பிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் போன்றவற்றில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.
குறுகிய நேரத்தில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டி விட்டு இந்தக் கும்பல் தப்பிச் சென்று விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சு பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளது.