ஆசிய -பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் நாளை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கொழும்பு வரவுள்ள, பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட், நாளை மறுநாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார்.
ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான வெளிவிவகாரப் பணியக அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
கொழும்பில் இவர், வடக்கிலும் தெற்கிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திப்பார். இதன் போது அவர்களின் குறைகளையும், காணாமல் போனோர் பணியகம் தொடர்பான கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்வார்.
யாழ்ப்பாணம் செல்லும் பிரித்தானிய அமைச்சர், பிரித்தானியாவின் உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை பார்வையிடுவார். கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளில் மீளக் குடியேறிய மக்களையும் அவர் சந்திப்பார்.
சட்ட விரோத வனவிலங்கு வர்த்தகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
தனது பயணம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய அமைச்சர், மார்க் பீல்ட்,
“சிறிலங்காவும் பிரித்தானியாவும் நீண்டகால நண்பர்கள். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவுக்கு உதவ நாம் கடமைப்பட்டுள்ளோம்.
நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் வரவேற்கிறேன்.
எல்லா இலங்கையர்களுக்குமான நிலையான அமைதியையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துவதற்குத் தேவையான மேலதிக நகர்வுகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் பேச்சு நடத்த எதிர்பார்த்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.