பரிசில் இருந்து Nantes சென்றுகொண்டிருந்த பேரூந்து ஒன்று நடு வழியில் நிறுத்தப்பட்டது. சாரதிக்கு வழி தெரியாததால் பேரூந்தை நடுவழில் கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, Ouibus நிறுவனத்தைச் சேர்ந்த பேரூந்து ஒன்று 40 பயணிகளுடன் Bercy இல் இருந்து வெள்ளிக்கிழமை காலை 8.20 மணிக்கு புறப்பட்டது. பின்னர் காலை 10.30 மணி அளவில் பரிசின் தென்மேற்கு பகுதியான Messyஇல் சாரதி பேரூந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் பேரூந்தில் இருந்து இறங்கி சென்றுள்ளார். இதனால் நடப்பது என்னவென தெரியாமல் பயணிகள் திகைக்க, பேரூந்து நிறுவனத்துக்கு தொலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னார்கள். பின்னர் பிறிதொரு சாரதி வந்து பேரூந்தினை தொடர்ந்து ஓட்டிச்சென்றார். இந்த சம்பவத்தினால் பயணிகள் மூன்று மணிநேர தாமதத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்கள்.
விசாரனைகளில், சாரதி வழியை மறந்துவிட்டதால் பேரூந்தை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வேறு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு பயணசிட்டையின் பணத்தினை திருப்பி அளிப்பதாக பேரூந்து நிறுவனம் உறுதியளித்துள்ளது.