ஸ்பானிய கால்பந்து லீக் தொடர் போட்டியில் இஸ்பான்யால் அணியை பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது, ‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.
ஆனால் 25வது நிமிடத்தில் இவான் ராகிடிக் பாஸை மெஸ்ஸி வாங்கி கோலாக மாற்றிய போது அவர் ‘ஆஃப் சைடு’ என்று ரீப்ளேக்கள் காட்டின. ஆனால் கோல் என்றே தீர்ப்பளிக்கப்பட்டது.
மீண்டும் ராக்கிடிக், மெஸ்ஸி கூட்டணி 31-வது நிமிடத்தில் ஒரு கோலுக்கு ஆயத்தமாக மெஸ்ஸி ஷாட்டை கோல் கீப்பர் பாவ் லோபஸ் அருமையாகத் தடுத்தார். சுவாரேஸ் இருந்தாலும் மெஸ்ஸி அளவுக்கு அவர் சோபிக்கவில்லை, இடைவேளைக்குப் பிறகு இவர் அடித்த ஒரு ஷாட்டை மீண்டும் இஸ்பான்யால் கோல் கீப்பர் லோபஸ் தடுத்து கோல் வாய்ப்பை மறுத்தார்.
ஆனால் மீண்டும் மெஸ்ஸி இருமுறை பாஸ்களை வாங்கி அருமையாக எடுத்துச் சென்று மேலும் இருகோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார், பார்சிலோனா அணி 5-0 என்று வென்றது.
தங்கள் சொந்த மண்ணில் பார்சிலோனா அணி லா லீகாவில் 14 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. லயோனல் மெஸ்ஸி 18 கோல்களை அடித்து சாதனை புரிந்துள்ளார். இஸ்பான்யால் அணி லா லீகாவில் பார்சிலோனா அணிக்கு எதிராக 17 போட்டிகளில் வெற்றி பெற முடியாத நிலையே தொடர்ந்தது.