தம்மை வட மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய முறைமை தவறு எனத் தெரிவித்து பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடையீட்டு எழுத்தாணை மனு ஒன்றைத் தாக்கல் நேற்று(30) தாக்கல் செய்துள்ளார்.
தம்மை அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றியமைக்கு எதிராக உடனடியாக இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கும்படியும், உரிய விசாரணையின் பின்னர் அவ்வாறு வெளியேற்ற விடுத்த உத்தரவு முறைமை தவறானவை என்று பிரகடனப்படுத்தும் படியும் பா.டெனீஸ்வரன் குறித்த இந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான க.சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், க.சிவநேசன், க.குணசீலன், முன்னாள் அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறித்த இந்த மனு இன்று(31) அல்லது எதிர்வரும் 04 அல்லது 05ம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவின் வழிகாட்டலில் சட்டத்தரணி லிலாந்தி டி சில்வா குறித்த இந்த மனுவை நேற்று(30) தாக்கல் செய்துள்ளார்.
