சுமார் 23 இலட்சம் ரூபா பெறுமதியான 16,930 கருக்கலைப்பு மாத்திரைகளுடன் ஒருவர் கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் உத்தர பிரதேசத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகச் சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின்றி முக்கிய பயணிகள் செல்லும் பதியினூடாக குறித்த நபர் வெளியேற முயற்சித்த வேளை, அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நபரின் பயணப்பொதியை பரிசோதனை செய்த போதே பெறுமதி வாய்ந்த கருக்கலைப்பு மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க திணைக்கள பிரதி பணிப்பாளர் பராக்ரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு கோட்டை, மருதானை ஆகிய பகுதிகளிலுள்ள தெரிவு செய்யப்பட மருந்தகங்கள் சிலவற்றுக்கு குறித்த மாத்திரைகளை விநியோகித்து மீண்டும் இந்தியாவிற்குப் பயணிக்கவிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட நபருக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

