தென்மராட்சி-மீசாலை மற்றும் மண்டுவில் பகுதிகளில் டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் கஞ்சாச் செடிகள் வளர்ப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினரால் குறித்த பகுதிகளில் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நேற்றும், இன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மண்டுவில் பிரிவில் உள்ள தொடருந்துத் திணைக்கள தண்டவாளப் பணியாளர்களுக்கான விடுதியில் டெங்கு பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் விடுதிக்குப் பின்பகுதியில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அங்கே வெண்டிச் செடிகளுடன் கஞ்சாச் செடிகள் காணப்பட்டதை அவதானித்த அலுவலர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
குறித்த பகுதிக்க விரைந்த பொலிஸ் அதிகாரிகள் கஞ்சாச் செடிகளை பிடுங்கி அழித்ததுடன் விடுதிக்குள் சென்று சோதனையிட்ட போது பெருமளவு கஞ்சா போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையிலும் ஒருதொகை பீடிகளில் சுற்றி விற்பனைக்குத் தயாரான நிலையிலும் கஞ்சா இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.