‘‘பாகிஸ்தானுக்கு எதிரான மோதல் என்றால், எனது ஒரு கால் இல்லாவிட்டாலும் கூட விளையாடத்தயார்,’’ என, தோனி கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு மூன்று வித உலக கோப்பை வென்று தந்தவர் தோனி. தற்போதை இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்துகிறார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத், தன் பங்கிற்கு தோனியை பாராட்டினார்.
பிரசாத் கூறியது:
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஆசிய கோப்பை ‘டுவென்டி–20’ போட்டி நடந்தது. இதற்குத் தயாரான போது, ஜிம்மில் பளுதுாக்கினார் தோனி. அப்போது முகுது பகுதியில் பிடித்துக் கொண்டது. உடனடியாக பளுவை கீழே போட, காயம் இல்லாமல் தப்பினார். ஆனாலும், நடக்க முடியாமல் சிரமப்பட்டார்.
அவரது நிலைமை அறிய ‘டிரசிங் ரூம்’ சென்றேன். அவர் என்னைப் பார்த்து, ஒன்றுமில்லை, வருத்தப்படாதீர்கள் என்றார். மறுநாள் இந்திய அணிக்காக விளையாட தயாராகிக் கொண்டிருந்தார்.
நான் வருத்தமாக இருப்பதைப் பார்த்த தோனி, என்னை அழைத்து, ஏன் இவ்வளவு சோகமாக உள்ளீர்கள், ‘எனக்கு ஒரு கால் இல்லை என்றாலும் கூட பாகிஸ்தானுடனான போட்டி என்றால் களத்தில் இறங்கி விளையாடத் தயாராக உள்ளேன்,’ என்றார். அந்தளவுக்கு போட்டிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடக் கூடியவர் தோனி.
இவ்வாறு பிரசாத் கூறினார்.