கரூர் மாவட்டத்தில் நினைத்த இடத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்க, இரு சமூக மக்களிடம் அதிகாரிகள் சாதியப் பிரச்னையைக் கிளப்பிவிட முயல்வதாகப் பகீர் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கரூர் மாவட்டம், தோகைமலை காவல்நிலைய சரகத்துக்குட்பட்ட கிராமம் பச்சனாம்பட்டி. இந்தப் பகுதியில் இரு சமுதாய (முத்தரையர், கவுண்டர்) மக்கள் வாழ்கிறார்கள். இந்தச் சூழலில்தான், இன்று கரூர் மாவட்ட டாஸ்மாக் துணை மேலாளர் பரமேஸ்வரன், குளித்தலை தாசில்தார், குளித்தலை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து வந்து,பச்சனாம்பட்டியில் டாஸ்மாக் கடையைத் திறக்க முயன்றார்.
இதைக் கேள்விப்பட்டு அந்தப் பகுதியில் குவிந்த மக்கள், குறிப்பாகப் பெண்கள், “இங்க டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது. இந்த வழியாகத்தான் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளெல்லாம் போய் வர்றோம். இங்க டாஸ்மாக் கடை வந்துச்சுன்னா, இந்த வழியா போய் வரும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். அதனால், இங்க டாஸ்மாக்கை திறக்கக் கூடாது” என்றபடி, குளித்தலை டு மணப்பாறை நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், ” ‘டாஸ்மாக்கை இங்க திறக்கமாட்டோம்’ன்னு எழுதித் தாங்க. சாலைமறியலைக் கைவிடுகிறோம்” என்று சொல்ல, வேறு வழியில்லாமல் டாஸ்மாக் துணை மேலாளர் பரமேஸ்வரன் மாவட்ட மேலாளர் அய்யப்பனுக்குத் தகவல் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறார்.
இதற்கிடையில், அதைவிட்டு 200 அடி தள்ளி கூடிய இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள், “இந்த இடத்தில் கண்டிப்பாக டாஸ்மாக் கடையைத் திறக்கணும். இவ்வளவு பெரிய ஊரில் டாஸ்மாக் இல்லைன்னா எப்படி? கண்டிப்பா கடையை இங்கதான் திறக்க வேண்டும்” என்றபடி ஏட்டிக்குப் போட்டியாகச் சாலை மறியல் செய்ய, காவல்துறைக்கு மண்டை காய்ந்தது. ஆனால்,அவர்கள் ஒரு மணி நேரத்தில் சாலை மறியலைக் கைவிட்டு, கலைந்தனர்.
ஆனால், ‘டாஸ்மாக் வேண்டாம்’ என்று கூறும் மக்கள் சாலை மறியலைத் தொடர்கின்றனர். நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள்,
“இங்க திறக்க முயல்கிற 5062 எண் கொண்ட டாஸ்மாக் கடை, இங்கிருந்து மூன்று கிலோமீட்டர்ல உள்ள கழுகூர்ல இருந்த கடை. அதைதான், மூன்று மாசத்துக்கு முன்பே எங்க ஊருக்கு கொண்டு வர பார்த்தாங்க. நாங்க கடுமையா எதிர்த்து போராடியதும், திறக்காம போயிட்டாங்க. ஆனால், இன்னைக்கு போலீஸ் ஃபோர்ஸோட வந்து கடையைத் திறக்க பார்த்தாங்க. நாங்க அதனால்தான் சாலை மறியல் செய்றோம். ஆனால், அந்த டாஸ்மாக் கடை வர இருக்கும் கட்டடத்தின் உரிமையாளர் வேற சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே, அதிகாரிகள் இங்க கடையைத் திறக்க அவரை சாதி ரீதியாகத் தூண்டிவிட்டு, அவங்க சமூகத்தை (முத்தரையர்) சேர்ந்த ஆட்களைத் திரட்டி, ‘டாஸ்மாக் வேண்டும்’ன்னு போராட வைக்கிறாங்க. அமைதியா இருக்கும் இந்தப் பகுதியில் அதிகாரிகளே முன்னின்று சாதிய மோதலை வர வைக்க பார்க்கிறாங்க. அவங்க என்ன வேணும்னாலும் பண்ணட்டும். எங்க ஊர்ல டாஸ்மாக் கடையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்றார்கள் உறுதியாக.

