போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தே சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் காலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் நேற்று (15) அவரிடம் வினவிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காலோ பொன்சேகாவிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த போது அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். பொதுமக்களுக்கும், அப்பாவி நோயாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத விதமான போராட்டங்களை முன்னெடுக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
அரசாங்கம் மீண்டும் அப்பதவியில் இவரை நியமிக்கும் தீர்மானத்தில் இல்லை. புதிதாக ஒருவரை தலைவராக நியமிக்கும் அதிகாரம் சுகாதார அமைச்சுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தனது சைட்டம் கோரிக்கையை நிறைவு செய்து கொள்ளும் முகமாக தனக்கு சார்பான ஒருவரை நியமித்துக் கொள்ளப் போவதாக குற்றம்சாட்டி வருகின்றது.
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் காலோ பொன்சேகாவை நீக்கி விட்டு புதியவரை நியமிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தால் முன்னறிவித்தலின்றி வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், காலோ பொன்சேகா அப்பதவியில் இருப்பதற்கு தனக்கு முடியாது என ஜி.எம்.ஓ.ஏ. யிடம் பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.