யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஈச்சமோட்டை, குளத்தடிப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குழுவொன்று அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்களைத் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலின் போது இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பின்னர் அந்தக் குழுவினர் அருகில் இருந்த வீட்டிற்குள்ளும் நுழைந்து அங்கிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் யாழ். மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் அவரது மகளும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த நால்வரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணகளை யாழ்ப்பாணப் பொலிஸார் நடத்திவருகின்றனர்.
