Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழக மீனவர்களின் தியாகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறக்கலாமா? | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

October 29, 2021
in News, கட்டுரைகள்
0
தமிழக மீனவர்களின் தியாகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறக்கலாமா? | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்
தமிழக மீனவர்களின் தியாகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறக்கலாமா?
ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் இருக்கும் உறவு என்பது வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. ஈழமும் தமிழகமும் நிலத்தாலும் இனத்தாலும் தொப்புள்கொடி உறவைக் கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில், இந்த 2 நிலங்களும் நிலத்தால் ஒன்றுபட்டிருந்தன என்று சொல்லப்படுகிறது. இன்றைக்குக் கடலால் பிரிக்கப்பட்டபோதும் ஈழத்தை அண்டிய தமிழக நிலத்தின் பண்பாட்டுக்கும் ஈழத்துக்கும் ஒரு இடையறாத தொடர்பு காணப்படுகிறது. நில அமைப்பிலும்கூட, தமிழகத்தின் குழந்தைபோல ஈழத்தின் அமைப்பு இருப்பதும் 2 நிலங்களுக்கும் இடையிலான நெகிழ்வைக் காட்டுகிறது. ஈழத்தில், சிங்கள அரசால் ஈழத்தமிழ் மக்கள் ரணங்களைச் சுமக்கும்போதெல்லாம் தமிழகம் பெரும் சினம் கொண்டிருக்கிறது. இனவழிப்பைத் தடுக்கவும் தமிழர் உரிமையை மீளளிக்க வேண்டும் என்றும் தமிழகம் உருக்கொண்டிருக்கிறது. ஈழத்தில் நாங்கள் பேச முடியாமல் வாய்கள் கட்டப்பட்டு ஒடுக்கப்படுகின்ற காலத்தில், எங்கள் குரலாகத் தமிழகம் இருந்திருக்கிறது. ஈழம் என்ற விடயத்தில் மாத்திரம், தமிழகத்தின் கட்சிகள் வேறுபாடின்றி இணைந்து செயற்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஈழம் உணர்வுபூர்வமான இடத்தை வகிக்கிறது. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்குப் பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஈழத்துக்கு வெளியிலிருந்து, முதலாவது சட்டபூர்வமான தீர்மானத்தைத் தமிழக அரசு நிறைவேற்றியது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்து, அதிக உரையாடல்களும் கவனப்படுத்தல்களும் போராட்டங்களும் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.https://dailymotion.com/embed/playlist/x79xh7?autoplay=1&mute=1தமிழக மீனவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக ரத்தம் சிந்தியுள்ளார்கள். தமிழக மீனவர்கள் இல்லை என்றால், ஈழவிடுதலைப் போராட்டம் இல்லை என்றே கூற வேண்டும். இப்படியான சூழலில் அண்மையில் ஈழத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு போராட்டத்தை அறிவித்திருந்தது. ‘எமது கடல்வளத்தைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அந்தப் போராட்டம், தமிழக மீனவர்களுக்கு எதிரானது என்பதுதான் பெருத்த துயரமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கட்சி ஆதரவாளர்களில் சிலரும் மாத்திரம் கலந்துகொண்ட அந்தப் போராட்டத்துக்கு, மக்கள் ஆதரவு வழங்கவில்லை. ஏனென்றால், தாய் தமிழகத்துக்கு எதிராக இப்படியொரு போராட்டத்தை நடத்துவதை ஈழ மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். ஈழம் முன்புபோல் இருந்திருந்தால், இத்தகைய போராட்டம் நடந்திருக்குமா? உண்மையில் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான கடல் என்பது, தமிழக மக்களும் ஈழமக்களும் பாரம்பரியமாகப் பகிர்ந்துகொண்ட கடல் வளம். சிங்கள அரசு ஈழத்தை முழுமையாகக் கைப்பற்றிய பிறகுதான், ஈழக் கடலில் தமிழக மீனவர்கள் கடல் வளத்தை அபகரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஆக்ரோஷமாக எழுகின்றது. விடுதலைப் புலிகள் காலத்தில் இந்தக் குற்றச்சாட்டு எழவில்லையே? தற்போதைய எண்ணிக்கையின்படி, இதுவரையில் 800 தமிழக மீனவர்களைச் சிங்கள கடற்படை பலியெடுத்திருக்கிறது. அண்மையில்கூட, ராஜ்கிரண் என்ற தமிழக மீனவர் கொல்லப்பட்ட நிலையில், ஈழத்தில் இப்படி ஒரு போராட்டத்தைத் தமிழ்த் தலைவர்கள் ஏற்படுத்தியமை வரலாற்றுத் தவறாகும். ஏனென்றால், தமிழகத்தையும் ஈழத்தையும் பிரித்துவிட வேண்டும் என்பதில் சிங்கள அரசு குறியாக இருக்கிறது. இதனால் கடலில் ஈழ – தமிழக மீனவர்களுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதன் வாயிலாக, 2 விடயங்களைச் சாதிக்க சிங்கள அரசு முற்படுகிறது. தமிழீழத்தை ஆதரிக்கும் தமிழகக் குரலை இல்லாமல் செய்வது ஒரு நோக்கம். இலங்கை அரசு மேற்கொண்ட தமிழக மீனவர் படுகொலையை நியாயப்படுத்துதல் 2-வது நோக்கமாகும். இதில் துயரம் என்னவெனில், இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் துணைபோகும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போராட்டம் முனைந்ததுவே. தமிழக – ஈழக் கடல் சார்ந்த சிக்கல்கள் இருந்தால், அதை தமிழக மற்றும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ்த் தலைவர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடாத்தி தீர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாகவும் சட்டபூர்வமாகவும் 2 நிலங்களுக்கும் இடையிலான உறவை அப்படித்தான் பேண வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின் தளமாக தமிழகமே செயற்பட்டு இருக்கின்றது. அதில் தமிழக மீனவர்களின் பங்களிப்பும் தென் தமிழகத்தின் பங்களிப்பும் அளப்பரியது. ஒருவகையில் சொன்னால், தமிழக மீனவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக ரத்தம் சிந்தியுள்ளார்கள். தமிழக மீனவர்கள் இல்லை என்றால் ஈழவிடுதலைப் போராட்டம் இல்லை என்றே கூற வேண்டும். காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்வதற்காக, விரைந்த தமிழக மீனவர்களின் படகுகளும் அதனால் காயம்பட்டு ரத்தம் சிந்திய மீனவர்களும் இருக்கிறார்கள். அதைப்போல ஈழத்தில் போர்மூண்ட தருணங்களில் எல்லாம், மக்கள் கைகளில் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்தார்கள். சுமார் ஒன்றரை லட்சம் மக்கள், இதுவரையில் கடல்வழியாகப் புலம்பெயர்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் எல்லோரையும் கடலில் கொண்டு சென்றவர்களும் கடலில் மீட்டவர்களும் தமிழக மீனவர்கள்தான். ஈழத்தில் பெரும் ஆபத்துகளைச் சந்தித்த எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமது உயிரைக் காக்க அந்தரித்த தருணங்களில் அவர்களைத் தமிழகத்துக்குக் கொண்டு சேர்த்தவர்களும் தமிழக மீனவர்கள்தான்.
ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பாரம்பரிய உறவுக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. எத்தனையோ கதைகள் இருக்கின்றன. எத்தனையோ வரலாறுகள் இருக்கின்றன. சங்க காலத்தில், ஈழத்திலிருந்து சென்று தமிழகத்தில் சங்கக் கவிதை இயற்றிய பூதந்தேவனார் தொட்டு தமிழ் நவீன கவிதையின் பிதாமகனாகக் கருதப்படுகின்ற பிரமிள் வரை, இலக்கியத் தொடர்புகூட நீண்ட பாரம்பரியம் கொண்டது. சம காலத்தில் என்னைப் போன்ற எழுத்தாளர்களின் இலக்கியப் பதிப்புகள்கூட தமிழகத்தில்தான் நடக்கின்றன. இந்தப் பாரம்பரிய உறவில் விரிசலை ஏற்படுத்தி, அதில் அரசியல் ஆதாயம்பெற முனைவதுதான் இலங்கை அரசின் எண்ணம். அதற்கு இனி ஒருபோதும் இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் துணைபோகக் கூடாது. ஈழத்தில் சிங்கள மீனவர்கள் ஈழக் கடலையும் ஆக்கிரமித்து, ஈழ நிலத்தையும் ஆக்கிரமித்து மக்களைக் குடிபெயரச் செய்து மேற்கொள்ளுகின்ற ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதில்தான், தமிழ்த் தலைமைகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும். ஈழக் கடலில் ஈழ மீனவர்களை விரட்டி மீன் பிடித்து மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பால், ஈழ மீனவர்களின் வாழ்வாதாரம் மாத்திரமின்றி வாழ்நிலமும் பறிபோகிறது. அதைத் தடுப்பதில்தான் தமிழ்த் தலைவர்களின் அக்கறை இருக்க வேண்டும். அதைவிடுத்து தமிழக – ஈழ மக்களிடையே விரிசலை ஏற்படுத்தி தமிழக மீனவர் படுகொலையை நியாயப்படுத்த முனையும் இலங்கை அரசின் எண்ணத்துக்குத் துணைபோகாமல் இருப்பதே நல்லது.
தீபச்செல்வன், ஈழக் கவிஞர், எழுத்தாளர்.
நன்றி: தமிழ் இந்து காமதேனு
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]
Previous Post

‘அண்ணாத்த’ பட வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Next Post

நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? | வெளியான புதிய தகவல்

Next Post
கொரோனா நிவாரணத்திற்கு ரஜினி 50 இலட்சம் ரூபா நன்கொடை

நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? | வெளியான புதிய தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures