திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு, ஐப்பசி மாத பவுர்ணமி நட்சத்திர பிரகாரப்படி, நாளை (வியாழக்கிழமை) மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது.
உயிர்களை இயக்கும் சக்தி படைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம். அத்தனை சிவன் கோவில்களிலும் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்பட்டுள்ளது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது.
ஐப்பசியில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் 16 கலைகளுடன் பூரண சோபையுடன் பிரகாசிக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சிவாலயங்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அதன்படி, இன்று (புதன்கிழமை) ஐப்பசி பவுர்ணமி தினமாகும். அதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது. சிவன் காலடியில் படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நொடிகள் வராது. குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம். மேலும் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியமும் கிட்டும் என்பதாகும். தற்போது அனைத்து நாட்களிலும் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலின் தெற்கு மூலையில் உள்ள குபேர லிங்கத்திற்கு இன்று (புதன்கிழமை) மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது. இதுபோல நந்தி கோவில் தெருவில் உள்ள நாகநாதர் கோவிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.
திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் இன்று மாலை 6 மணி அளவில் சுமார் 100 கிலோவுக்கு மேல் சாதம் வடித்து மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதே போன்று திருச்சி உறையூரில் உள்ள தாந்தோன்றீஸ்வரர் கோவில், முசிறியில் சந்திரமவுலீஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் நடக்கிறது.
இதேபோல் லால்குடி சப்தரிஷ்வரர், பூவாளூர் திருமூலநாதர், மாந்துரை சாமவேதீஸ்வரர், புள்ளம்பாடி சிதம்பரவேதீஸ்வரர், கல்லக்குடி பசுபதீஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது.
தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 4 மணிக்கும், பாலசமுத்திரம் கல்யாண பாலாம்பிகை சமேத கல்யாணசோமேஸ்வரர் கோவில், திருஈங்கோய்மலை மரகதாம்பிகை சமேத மரகதாசலேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் மாலை 5 மணிக்கும், மாராச்சிப்பட்டி அபிராம்பிகை சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மாலை 6 மணிக்கும், அரசலூர் சுகந்தகுஜலாம்பிகை சமேத தாயுமானசுவாமி கோவிலில் மாலை 5 மணிக்கும் அன்னாபிஷேகம் நடக்கிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டிலுள்ள போஜீஸ்வரர்கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாத சுவாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் இன்று மாலை 5 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதேபோல் துறையூர், மணப்பாறை, உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களிலும் இன்று (புதன்கிழமை) அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் திருக்காமேஸ்வரர், தா.பேட்டையில் காசி விசுவநாதர், மங்கலம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர், காருகுடி கைலாசநாதர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு, பவுர்ணமி நட்சத்திர பிரகாரப்படி, நாளை (வியாழக்கிழமை) மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை தொடங்கி, பின்னர் தாயுமானவர் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் நூற்றுக்கால் மண்டபத்தில் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் நிர்வாகம் சார்பில் மகா அன்னாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]