அமெரிக்காவில் விமானம் ஒன்று வீதியில் சென்ற கார் மீது மோதி நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வடக்கு பெர்ரி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உட்பட 2 பேர் பயணித்தனர்.
சிறிது நேரத்தில் குறித்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் விமானம் நடுவானில் திணறியது. இதையடுத்து, விமான நிலையத்தை அண்மித்த குடியிருப்பு பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார்.
அதன்படி குடியிருப்பு பகுதியில் உள்ள வீதியில் விமானம் தரை இறங்கியபோது சற்றும் எதிர்பாராத வகையில் வீதியில் சென்று கொண்டிருந்த கார் மீது விமானம் மோதியுள்ளது. இதில் கார் உருக்குலைந்து போனது. மேலும் மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காரில் இருந்த பெண்ணும் ஒரு சிறுவனும் பலத்த காயமடைந்தனர். இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

